இமயமலையின் தாருகாவனம் - ஜாகேஸ்வர்!

நமது ஆதிகைலாய ஓம்பர்வத யாத்திரையில் நாம் தரிசிக்க இருக்கும் சிறப்பு வாய்ந்த ஒரு புராதன கோவில் தான் ஜாகேஸ்வர். இமயமலையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் ஜட கங்கா எனும் சிறுநதியின் கரையில் இருக்கிறது ஜாகேஸ்வர் கோவில்கள்.


ஆதிகைலாயம், ஓம்பர்வதம் தரிசனம் முடித்துவிட்டு வரும்போது, இமயமலை ரோடுகளில் நாம் வருவோம். வழியில் தேவதாரு மரங்கள் ஓங்கி வளர்ந்து நிறைந்து கிடக்கும் தாருகாவனம் இது. தேவதாரு மரங்களில் தொகுப்பாக இருக்கும் இந்தப்பகுதி ‘தேவ்பனி’ என்று சொல்லப்படுகிறது. அதாவது கடவுளின் காடு என்கிறார்கள். இந்த மிகப்பெரிய தேவதாரு வனத்தில் ஹாத் காளிகா என்று சொல்லக்கூடிய மாகாளி கோவிலும், ஜாகேஸ்வர் கோவிலும் இருக்கிறது.

ஹாத்காளிகா ஒரு சக்திபீடம். ஜாகேஸ்வர் ஜோதிர்லிங்க கோவில் ஆகும்.

அதாவது, ததாஸ்து ஜோதிர்லிங்க ஸ்தோத்திரமானது ஜோதிர்லிங்க கோவில்கள் பற்றி சொல்லும் போது, நாகேஷம் என்பது தாருகாவனம் என்று குறிப்பிடுகிறது.

குஜராத்தில் உள்ள துவாரகாவில் ஒரு நாகேஸ்வர கோவிலும், மகாராஷ்ட்ராவின் ஹிங்கோலியில் உள்ள அவுந்த் நாகநாத் கோவிலும், உத்தரகாண்டில் அல்மோரா அருகில் உள்ள ஜாகேஸ்வர் எனும் இந்த கோவில் ஆகிய 3 கோவில்களும் ஜோதிர்லிங்க கோவில்களாக கருதப்படுகின்றன.

தாருகாவனம் தான் நாகேஷம் என்று ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் சொல்லுகிறது. இதனால் குஜராத்தில் உள்ள துவாரகா தான்  நாகேஸ்வர் ஜோதிர்லிங்கம் என்று வழிபடப்படுகிறது.

மகாராஷ்ட்ராவில் உள்ள அவுந்த் நாகநாத் கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானது. முற்காலத்தில் இங்கு தான் தேவதாரு மரங்கள் நிறைந்த தாருகாவனம் இருந்ததாகவும் இதுதான் ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம் குறிப்பிடும் நாகநாத் ஜோதிர்லிங்கம் என்றும் வழிபடப்படுகிறது.

அதே நேரம், உத்தரகாண்டில் ஆல்மோரா அருகில் நாம் செல்ல இருக்கிற ஜாகேஸ்வர் கோவிலானது, தேவதாரு மரங்கள் நிறைந்த இமயமலைக்காட்டில் இருக்கிறது. இந்தக்கோவில் நாகேஷம் என்ற ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகிறது.

 நூற்றாண்டுகள் கடந்த வானுயர்ந்த தேவதாரு மரங்களை இங்கு பார்க்கலாம்.

ஆக தாருகாவனத்தில் பாரதத்தில் 3 இடங்களில் ஜோதிர்லிங்க நாகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

அருமையான 2500 முதல் 1500 ஆண்டுகள் கடந்த கோவில் தொகுப்பாக ஜாகேஸ்வர் கோவில் இருக்கிறது. லிங்க வடிவமாக ஜாகேஸ்வருக்கும், ம்ருத்யுஞ்சநாதருக்கும், சக்திவடிவமாக புஷ்டிமாதாவும் அருள்பாலிக்கிறார்கள். 125 கோவில்கள் கொண்ட தொகுப்பாக இந்தக் கோவில் இருக்கிறது. மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பாதுகாத்து வரும் இந்த கோவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிவபெருமான் ஜோதிவடிவமாக வணங்கப்பட்ட இடமாக கருதப்படுகிறது.

கோவில் வளாகம் வருவதற்கு முன்னர் ஜாகேஸ்வர் கிராமத்துக்குள் வரும்போதே உடல் சிலிர்க்கும் ஜடகங்கை நதிக்கரையில் ஓங்கி உயர்ந்த தேவதாரு, பைன் மரங்களுக்கு நடுவேயான பாதையில் 3 கி.மீ பயணித்து ஜாகேஸ்வரை அடையலாம்.

ஜோதிர்லிங்கமாய் கண்டு தரிசித்து மகிழலாம். சொல்ல இயலாத பரவச அனுபவம் அது.

முந்தைய காலத்தில் பாரதம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் கைலாய யாத்திரைக்கு  செல்லும் போது இந்த காடுகளில் எல்லாம் அலைந்து திரிந்து ஜாகேஸ்வரில் தரிசனம் செய்துவிட்டு செல்வார்களாம்..ஆதி சங்கரர் கால்நடையாகவே இங்குவந்து தரிசித்ததாகவும், சிலகோவில்களை மேம்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்கள் கட்டிய கோவில்கள் இவை.

இப்போது இருக்கக்கூடிய சாலைவசதியும், போக்குவரத்து, தகவல் தொடர்பு, தங்குமிடம் உணவு வசதிகள் இல்லாத காலத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என கேட்கும் போது பிரமிப்பு தோன்றாது. சிவனை நினைத்து சிலிர்க்க தான் செய்கிறது.

வழியில் தண்டேஸ்வரர் கோவில் இருக்கிறது. இதுவும் 1500 ஆண்டுகள் பழமையானது. அங்கும் தரிசனம் செய்வோம்..

இமயமலை வாசிகளிடம் ஒரு சொலவடை உண்டு ‘ஜித்னே பத்தர்... உத்னே சங்கர்” என்பது தான் அது.  மலை முழுக்க சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் எத்தனை கல் இருக்கிறதோ அத்தனையும் சிவன் தான் என்பது அதன் அர்த்தம்.

அத்தனை அவதாரத் திருமேனியும் தரிசிக்க வாழ்நாள் போதாது. அவன் அழைக்கும் இடமெல்லாம் சென்று தரிசிப்போம்!!

இமயமலை தாருகாவனத்தில் ஜாகேஸ்வரர் தரிசனத்துக்கு ரெடியா இருங்க...  #தமிழ் அஞ்சல்



Previous Post Next Post