இன்று அதிகாலை திடீரென உயிரிழந்த தாய் - தாயின் காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்று அரசு பொதுத்தேர்வெழுத சென்ற மகள்.
உறவினர்களை கலங்க வைத்த பட்டுக்கோட்டை அருகே வெட்டுவாகோட்டையில் நடந்த சம்பவம்
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் - கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார்.
தற்போது தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் காவியாவின் அம்மா கலா இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி காவியாவிற்கு இன்று (பயாலஜி) உயிரியல் தேர்வு. இன்னும் சற்று நேரத்தில் தேர்வு தொடங்க உள்ள நிலையில் காவியாவின் அம்மா கலா இன்று அதிகாலை உயிரிழந்தது காவியாவிற்கு மிகப்பெரிய இடியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட காவியா தன் தாய் வீட்டில் இறந்துகிடக்கும் நிலையில் இன்று காலை உயிரியல் தேர்வு எழுதுவதற்கு ஊரணிபுரம் அரசு
மேல்நிலைப்பள்ளிக்கு தற்போது வந்துள்ளார். காவியா தேர்வு எழுத செல்வதற்கு முன்பு இறந்துகிடந்த தனது தாய் கலாவின் காலில் கதறி அழுதபடியே விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இதைப் பார்த்த அருகிலிருந்த கலாவின் உறவினர்கள் கதறி அழுதனர். அதனைத் தொடர்ந்து காவியா தற்போது பள்ளிக்கு வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் தேர்வு ஆரம்பமாக உள்ளது. பள்ளிக்கு வந்த மாணவி காவியாவை பார்த்து அவரது சக தோழிகளும் காவியாவை
கட்டியணைத்து அழுதனர். இது குறித்து மாணவி காவியா அழுதபடியே கூறுகையில், நான் ஒவ்வொரு முறையும் தேர்வெழுத செல்லும்போது என் அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன். அப்போது அவர்கள் எனக்கு திருநூறு எடுத்து பூசி நீ நன்றாக தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வார்கள். தேர்வு எழுதிவிட்டு வந்தபிறகு எப்படி நீ தேர்வு எழுதியிருக்கிறாய். படிப்பு முக்கியம், நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இன்று எனது அம்மா இறந்து விட்டார்கள். எனக்கு படிப்பு முக்கியம் என்பதால் நான் இன்று தேர்வு எழுத வந்துள்ளேன் என்று அழுதபடியே கூறினார். காவியாவின் அப்பா ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர். காவியாவிற்கு காயத்ரி என்ற அக்காவும், திருச்செல்வம் என்ற அண்ணனும் உள்ளனர். திருச்செல்வம் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ படித்து வருகிறார். காயத்ரிக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்து நேற்றுதான் காயத்ரிக்கு தாலிபெருக்கி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியதால் இந்த குடும்பத்தின் வாழ்வாதாரமே இறந்துபோன கலா தான். இன்று அவரும் இறந்து விட்டதால் இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.