இந்திய தடகளக் கூட்டமைப்பின் சார்பில், 38வது தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள், உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன்-ராய்ப்பூரில் உள்ள மஹாராணா பிரதாப் சிங் ஸ்டேடியத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் வீரர்கள், வீராங்கனைகள் பலர் பங்கேற்றனர்.
நமது திருப்பூர், ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் வீராங்கனை S.K.ஸ்ரீவர்த்தனி, மகளிர் பிரிவின், 400மீ தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் இரண்டாமிடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். ஓட்ட தூரத்தை 59.86 நொடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்த வெற்றியானது இந்திய தடகளக் கூட்டமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும், இந்திய அளவில் முதல் 16 தரவரிசையில் உள்ளவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப்போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து பங்கேற்றுப் பதக்கம் வெல்வது இது முதன்முறையாகும். இந்த விளையாட்டுப் போட்டி இந்திய ஒலிம்பிக் போட்டிகள் என அழைக்கப்படுகிறது.
மேலும் உலக தடகள சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட 2025ம் ஆண்டிற்கான மகளிர் தரவரிசையில், திருப்பூர் வீராங்கனை S.K.ஸ்ரீவர்த்தனி உலக அளவிலான தடகளத் தரவரிசையில் 10வது இடத்திலும், ஆசிய அளவிலான தடகளத் தரவரிசையில் 3வது இடத்திலும் இருப்பது மிகவும் பெருமைக்குரியதும், பாராட்டுக்குரியதாகும்.
தேசிய தடகளத்தில் பதக்கத்துடன், சாதனைபடைத்த வீராங்கனைக்கும், அவரது தடகளப் பயிற்சியாளர் அழகேசன், வீராங்கனையின் பெற்றோர்கள்ஆகியோருக்கு கொங்குநாடு விளையாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், தங்கராஜ், மோகனகிருஷ்ணா, மணிகண்டன், மோகன் குமார் மற்றும் ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், நண்பர்கள் என அனைவரும் பொன்னாடை அணிவித்தும், நினைவுப்பரிசு வழங்கியும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.