ஹீட்டர் வசதியுடன் ’வெதுவெது’ரயில்... காஷ்மீர் குளிருக்கு கச்சிதமா இறக்குது ரயில்வே... ஸ்ரீநகர் ரயில் பயண நேரம் வெளியீடு!!

இந்தியாவின் வடக்குப்பகுதியில் உள்ள காஷ்மீர் மாநிலம் நாட்டின் மிக முக்கிய பிராந்தியமாக உள்ளது. மிகப்பெரிய சுற்றுலாத்தளமாகவும் இருக்கிறது. இமயமலைமேல் இருக்கும் காஷ்மீர் வட்டாரப்பகுதியில் மலைகள், இயற்கை ஆறுகள், அருவிகள், பள்ளத்தாக்குகள் என கொட்டிக்கிடக்கும் அழகை ரசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் படையெடுக்கிறார்கள். இது தவிர காஷ்மீரில் இருக்கிற அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்கும் லட்சக்கணக்கான மக்கள் யாத்ரிகர்களாக படையெடுக்கிறார்கள். 

காஷ்மீரில் உள்ள சோன்மார்க், குல்மார்க் போன்ற பனிபடர்ந்த மலைகளும், அழகே உருவான தால் ஏரி, டூலிப் கார்டன் சங்கராச்சார்யா மலை உள்ளிட்ட பகுதிகளை பார்த்து ரசிக்கவும், தேனிலவு கொண்டாடவும் இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும் இருந்து மக்கள் படையெடுக்கிறார்கள். 


இப்படிப்பட்ட காஷ்மீர் பகுதியின் காஷ்மீர் பள்ளத்தாக்கு, மலைமேல் உள்ளதால் இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் மூலம் இணைக்கப்படாமல் இருந்து வருகிறது. மலை அடிவாரப்பகுதியான ஜம்மு வரைக்கும் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்ட போதும், மலைமேல் இருக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பனிஹலில் இருந்து  ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா வரையிலான காஷ்மீர் பள்ளத்தாக்கு ரயில் வழி இல்லாமல் துண்டான தீவாகவே மலைமேல் கிடந்து வந்தது. 


இந்த காஷ்மீர் பகுதிகளை இணைப்பதற்காக 1994ம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டு, ஜம்முவில் இருந்து உத்தம்பூர் வரையிலான பகுதிகள் இணைக்கப்பட்டு ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதே போல 2000மாவது ஆண்டுகளில் மலைமேல் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளான பனிஹல், ஸ்ரீநகர், பாரமுல்லா பகுதிகளில் அங்குள்ள மக்கள் பயன்பெற ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டது. 

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படக்கூடிய பனிபடர் மலைகள் கொண்ட காஷ்மீர் பள்ளத்தாக்கினை, இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள ரயில் நெட்வொர்க் உடன் இணைப்பது ரயில்வேக்கு மிகப்பெரிய சவாலான பணியாகவே இருந்து வந்தது.

இப்படி கடுமையான மலைகள், பள்ளத்தாக்குகளும் கொண்ட காஷ்மீர் மலைப்பகுதியை 30 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் டிராக்குகள் மூலம் இணைத்து ஒரு வரலாற்று சாதனையை புரிந்திருக்கிறது இந்திய ரயில்வே. நீண்டகாலமாக பனிஹல் ரயில் நிலையத்தையும், கட்ரா ரயில் நிலையத்தையும் இணைக்க நடந்து வந்த பனிகளை ஒருவழியாக முடித்து, ஒரு கடினமான மலைப்பகுதியில் சுரங்கங்கள், பாலங்கள் அமைத்து ரயில் தண்டவாளங்களை நிறுவி, ரயில் அட்டவணையும் வெளியிட்டு கெத்து காட்டுகிறது இந்திய ரயில்வே.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஜம்மு வட்டாரத்தில் உள்ள கட்ராவில் இருந்து, பனிஹல் செல்லும் பாதையில் செனாப் நதியினை கடப்பதற்காக, உலகிலேயே உயரமான இரும்புப்பாலத்தை அமைத்து உள்ளனர். இந்த இரும்புப்பாலம் 1177  அடி உயர பிரம்மாண்ட பாலமா கட்டப்பட்டு இருக்கிறது. ஈஃபிள் டவரை விட இது 114 அடி அதிக உயரம் கொண்டதா கட்டப்பட்டு உள்ளது. இது தவிர 11.25 கிலோ மீட்டர் நீளத்தில் பீர்பாஞ்சல் மலையை குடைஞ்சு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட ரயில் செல்லக்கூடிய மலைச்சுரங்கம் இந்த ரயில் பாதையில் அமைக்கப்பட்டு உள்ளது. 

மேலும் இந்த ரயில் பாதையில் காரி மற்றும் சம்பர் ரயில் நிலையங்களுக்கு இடையில் 12.77 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய மிகப்பெரிய  டி.50 என்கிற மலைச்சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இப்படி இந்த ரயில் பாதையில் சென்றால் 38 மலைச்சுரங்கங்களில் 119 கிலோமீட்டர் தூரத்தை சுரங்களுக்குள் மட்டும் செல்லக்கூடிய மிகப்பெரிய அட்வெஞ்சர் பாதையாக உருவாகி இருக்கிறது. இது தவிர 927 பாலங்கள் இந்த ரயில் பாதைக்காக கட்டப்பட்டு உள்ளன. 

மலைவழிப்பாதையில் செல்லும்போது மிகவும் தாமதமாகக்கூடிய இந்தப்பயணத்தை வெறும் மூன்றரை மணிநேர பயணமாக மாற்றி வரலாற்று சிறப்பு மிக்க ரயில் தடத்தை திறக்கிறது இந்திய ரயில்வே. 

இந்த ரயில் தடத்தில் வருகிற ஜனவரி 26ந்தேதி வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜம்மு உள்பட ரயில்வே கோட்ட அலுவலகங்களை ஜனவரி 6ந்தேதியே மோடி திறந்து வைக்கிறார் என வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 


மேலும் ஸ்ரீநகர் வரை இயக்கப்படக்கூடிய ரயில்களின் கால அட்டவணையையும் வெளியிட்டு உள்ளது. அதன்படி கட்ராவில் இருந்து காலை 8.10 மணிக்கு கிளம்புகிற வந்தே பாரத் ரயில் பகல் 11.20 மணிக்கு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை அடையும். இதுதவிர காலை 9.50 மணிக்கு கட்ராவிலிருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் அல்லது மெயில் மதியம் 1.10க்கு ஸ்ரீநகர் சென்று சேரும் எனவும், மதியம் 3 மணிக்கு கட்ராவில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் அல்லது மெயிலானது மாலை 6.20 மணிக்கு ஸ்ரீநகரை சென்று அடைய உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதே போல மறுமார்க்கத்தில் ஸ்ரீநகரில் இருந்து காலை 8.45 மணிக்கு புறப்படுகிற எக்ஸ்பிரஸ் அல்லது மெயிலானது மதியம் 12.45க்கு கட்ரா நகரினை அடைய உள்ளது. மதியம் 12.45க்கு ஸ்ரீநகரில் புறப்படும் வந்தே பாரத் ரயிலானது மாலை 3.55 மணிக்கு கட்ரா வந்தடையும். இதே போல மாலை 3.10க்கு புறப்படுகிற மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயிலானது மாலை 6.30 மணிக்கு கட்ராவினை அடையும் என வடக்கு ரயில்வே அறிவித்து உள்ளது. 

இதன்மூலம் முதல்கட்டமாக காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகருக்கு 3 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் நாட்டின் பல பகுதிகளையும் ஸ்ரீநகருடன் இணைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு உள்ளது. 

ஸ்ரீநகர் செல்லக்கூடிய வந்தேபாரத் ரயிலை பார்த்தோமானால் குளிர், வெப்பம் என அனைத்து காலநிலைகளிலும் இயங்கக்கூடிய அளவில் சென்னை ஐ.சி.எப் பேக்டரியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 8 முதல் 20 பெட்டிகள் வரை இணைக்கப்படலாம் என தெரியவருகிறது. ஆனால் கோடையில் ஏ.சி.,வசதியும், குளிர் அதிகமானால் வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளகூடிய ஹீட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

இதன் அடுத்தகட்டமாக டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லக்கூடிய வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயிலானது ஜனவரி26ல் இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ரயில் தடம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் காஷ்மீரின் கடைக்கோடி பார்டரான குப்வாரா, பாரமுல்லா, ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு பகுதிகள் என ஒட்டுமொத்த காஷ்மீரும் நாட்டின் அனைத்து பகுதிகளின் ரயில்வே நெட்வொர்க் உடன் இணைக்கப்படும். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு செல்லக்கூடிய பயண நேரம், பயண கட்டணம் குறையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதையெல்லாம் தாண்டி காஷ்மீரின் ஆப்பிள் வர்த்தகத்துக்கு புதிய ரத்த ஓட்டம் பாய்ச்சப்பட்டது போல நாட்டின் பல பகுதிகளுக்கும் ரயில்வே மூலம் நேரடியாக எடுத்துச்செல்ல முடியும். என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 

மொத்தத்தில் ஜனவரி 6ந்தேதி காஷ்மீர் மக்களுக்கும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்லக்கூடிய மற்ற மாநில மக்களுக்கும் ஒரு வெயிட் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. 

- எஸ்.மணிகண்டன்





Previous Post Next Post