சாதியத்தைத் தகர்க்க குடும்பங்களை ஜனநாயகப்படுத்த வேண்டும்...புத்தாண்டு கலை மாலையில் ஆதவன் தீட்சண்யா கருத்துரை


சாதியின் மிகச்சிறிய அலகுகளாக குடும்பங்கள் இருக்கின்றன. பொதுவெளியில் சாதி அற்றவர்களாக இயங்கப் பழகியிருந்தாலும், குடும்பத்திற்குள் சுத்த சாதிக்காரர்களாக செயல்படுகிறோம். எனவே குடும்பங்களை ஜனநாயகப்படுத்துவது சாதியத்தைத் தகர்க்க அவசியமாகும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா கூறினார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து 2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் செவ்வாயன்று “சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்!” என்ற முழக்கத்துடன் கலை மாலை நிகழ்ச்சியை நடத்தினர்.

உலகப் பிரச்சனையாக மாறும் சாதியம்

இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சாதியம் இப்போது உலகப் பிரச்சனையாக மாறி உள்ளது. இந்தியா, தெற்காசியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிலும் சாதியம் பிரச்சனையாக கருதப்படுகிறது.

மேல், கீழ் என ஒன்றின் கீழ் ஒன்றாக இருக்கும் சாதி, ஒவ்வொன்றும் இணக்கம் காண முடியாத பகை முகாம்களாக, உட்சாதிகளாக படிநிலைப் பாகுபாடுகளாக இருக்கின்றன என அம்பேத்கர் ஆய்வு செய்து சொல்லி இருக்கிறார். இந்தியாவில் சாதியின் பெயர்களை வரிசையாக எழுதி ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என படித்தால், 355 நாட்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் சாதிப் பெயர்களைப் படிக்க முடியும் என்று நிதி ஆயோக்கின் அரவிந்த் பனகரியா சொல்கிறார்.

இத்தனை சாதி, உட்சாதி இருந்தாலும் ஒரு சாதியும், உட்சாதியும் சமம் என்று சொல்லாது. சாதி பாகுபாடுகள் தீட்டு, புனிதம் என்ற கருத்தாக்கத்தின் வழியாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் தன் சாதியைப் பற்றி பெருமிதமான கற்பிதங்களை வைத்திருக்கின்றன. இதில் மற்ற சாதிகள் இழிவானவை என்று கற்பிதம் செய்வதை சாதி நம்பிக்கை இருப்பவர்கள் உண்மை என நம்புகிறார்கள். சாதி ஒருபோதும் மாற்றத்தக்கதல்ல. நீங்கள் மதம், கடவுள், உடை, உணவு, இருப்பிடம் என மாற்றிக் கொள்ளலாம். ஆனால் மாற்றிக் கொள்ளவே முடியாத ஒன்றாக சாதியம் இருக்கிறது.

உணர்வு நிலை

எல்லோருடைய மூளையிலும் சாதியம் இருக்கிறது. சாதியம் தகர்ப்போம் என்றால் நம்மை நாமே தண்டித்துக் கொள்வது, சுத்திகரித்துக் கொள்வது, நமக்குள்ளேயே போராடுவது என்று அர்த்தம். சாதி பருப்பொருளாக இல்லை. அது ஒரு உணர்வு நிலை. ஒவ்வொருவரும் அதைக் கடக்க வேண்டும். சாதி அகங்காரத்தைக் கைவிட வேண்டும், சாதியம் நமக்கு வழங்கியுள்ள சிறப்புச் சலுகைகளைக் கைவிட வேண்டும் எனப் பொருள்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை, இறப்புக்குப் பிறகும் சாதி நம்மை வழி நடத்துகிறது. சாதி மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களை சமமாக ஏற்காது. சாதி அமைப்பினால் ஆதாயம் அடைவோர் அதை வளர்க்க வேண்டும் என்பார்கள். ஏற்றத்தாழ்வு எந்த வடிவத்தில் இருந்தாலும் அதைப் போக்க வேண்டும் என சொல்லும் செயல்பாட்டாளர்கள் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் அதை ஒழித்துக் கட்ட வேண்டும் எனச் சொல்வார்கள்.

பொத்தாம் பொதுவாக சாதியத்தை ஒழிப்போம் எனப் பேசுவது மேனாமினிக்கித்தனம். அதைக் கைவிட வேண்டும் குறிப்பான விசயங்களில் பேசுவதுதான் மார்க்சியம். சாதி எங்கே இருக்கிறதோ அங்கே அதை கவனத்தில் கொண்டு அதை எப்படி களையப் போகிறோம், விடுவித்துக் கொள்ளப் போகிறோம் என்று பேச வேண்டும்.

சாதி அப்படியே இருக்கட்டும், தீண்டாமையை ஒழிப்போம் என்பது சாக்கடை அப்படியே இருக்கட்டும், நாற்றம் மட்டும் வரக்கூடாது என்பதுதான்!

சாதியை மறு உற்பத்தி செய்யும் குடும்பம்

சாதியை மறு உற்பத்தி செய்யக்கூடியதாக குடும்பங்கள் இருக்கின்றன. பழக்க, வழக்கங்கள் சொல்லித்தரக் கூடியதாக, சாதி கலப்பே வந்துவிடக் கூடாது என்று சொல்லிக் கொடுக்கக் கூடியதாக குடும்பம் இருக்கிறது. குடும்பம் என்பது சாதியின் ஆகச்சிறிய ஓர் அலகு. இதுதான் சாதியை மறுஉற்பத்தி செய்கிறது. எனவே குடும்பத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் சாதி பிறப்பின் அடிப்படையில் செயல்படுகிறது. யாரைத் திருமணம் செய்யலாம், யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று எல்லைதான் சாதி. சாதிக்கான சாஸ்திரங்கள், சட்ட விதிகள், தர்மங்கள் ஆகியவற்றை நடைமுறை வாழ்க்கையில் மீறி இருக்கிறோம். ஆனால் விஸ்வகர்மா திட்டம் என கொண்டு வந்திருக்கின்றனர். குலத்தொழில் என 18 சாதிகள் பிரித்து நவீன முறையில் குறிப்பிட்டத் தொழிலை, குறிப்பிட்ட சாதிதான் செய்ய வேண்டும் எனச் சொல்கின்றனர்.

படிப்பு, தொழில், வாழ்விடம், சிந்தனைப் போக்கு என எல்லாவற்றையும் சாதியம் தீர்மானிக்கும். பொதுவெளிகளில் சாதி அற்றவர்களாக இயங்கப் பழகியிருக்கிறோம். ஆனால் தனிமனித வாழ்க்கையில் சுத்த சாதிக்காரனாக வீட்டுக்குள் நுழைகிறோம்.

தலித்துகளின் பிரச்சனை மட்டுமல்ல

சாதியம் என்பதை பட்டியல் சமுகத்தில் இருக்கக்கூடிய 76 சாதிகளின் பிரச்சனை, தலித்துகளின் பிரச்சனை என்று நாம் புரிந்து கொண்டால் தவறு செய்தவர்களாவோம். சாதியம் ஒவ்வொருவரின் சிந்தனை, செயலிலும் குறுக்கீடு செய்து கொண்டு வழி நடத்துகிறது. பிறந்த குழந்தைக்கு முதல் ஆகாரம் எதைக் கொடுப்பது என்று சாதிதான் சொல்கிறது. சாதியின் வழிகாட்டுதலை குடும்பத்தில் துளியளவும் நழுவாதவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோ்ம். இது எல்லோரின் பிரச்சனை.

ஒருவரை ஒருவர் கண்காணிக்கக்கூடியவர்களாக, சந்தேகிக்கக்கூடியவர்களாக ஒவ்வொருவரின் பிரச்சனையாக சாதி நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறது. மனிதர்களை மனிதத்தன்மையில் இருந்து கீழ் இறக்கி மிருகங்களும் செய்யத் துணியாத அஞ்சுகின்ற செயலைச் செய்ய வைக்கிறது.

ஒரு மதிப்பு, சம மதிப்பு

அன்பு, பாசம், கருணை இது எதுவும் இல்லாத சாதியைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே பிறப்பெடுத்தவர்களாக, வேறு எந்த உணர்வும் இல்லாதவர்களாக நம்மை மாற்றுகிறதென்றால் அந்த சாதியத்தை வளர்க்க வேண்டுமா, தகர்க்க வேண்டுமா என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

ஒரு மனிதர் தோற்றத்தில் இருப்பதைப் போலவே நடத்தையிலும், பண்பிலும் மனிதர்களாகவே இருக்க வேண்டும் என்பதை 2025இன் நோக்கமாக வைத்துக் கொள்ளலாம். இன்னொருவரை சமம் என்று நினைக்கக்கூடிய, ஒருவருக்கு ஒரு மதிப்பு என்ற உயரிய பண்பை இந்த நாட்டு அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது. அந்த அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக ஒருவருக்கு ஒரு மதிப்பு, அது சம மதிப்பு என்பதை நாம் தேர்ந்து கொள்வோம். இவ்வாறு அவர்  பேசினார்.

முன்னதாக நிகழ்வுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால் தலைமை ஏற்றார். தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.திருப்பதி வரவேற்றார். கவிஞர் நறுமுகை தலைமையில் கவியரங்கம், உடுமலை துரையரசன், திருப்பூர் கிருஷ்ணனின் மண்ணிசைப் பாடல்கள், திருப்பூர் கலைக்குழுவின் நாடகம் நடைபெற்றது. தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைச் செயலாளர் பா.ஞானசேகர் நன்றி கூறினார்.

Previous Post Next Post