உலகெங்கும் புதிய புதிய நோய்கள் உருவாகி மக்களை வாட்டி வதைக்கின்றன. நோய்களின் தன்மை அதிகரித்ததால் அதற்கான மருத்துவ செலவும் மிகவும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை சமாளிப்பதற்காக மருத்துவ காப்பீடு அரசு மற்றும் தனியார் துறைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசின் சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் பெரும் வாய்ப்பு பலருக்கு கிடைக்கப் பெற்று சிகிச்சையும் பெற்று வருகிறார்கள். ஆனால் தனியார் மருத்துவக் காப்பீடு செய்தவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க நிதி கிடைக்காமல் அல்லல்படுவதையும் அலைகழிப்பதையும் அங்கிங்கெனாது எல்லா தனியார் மருத்துவமனைகளிலும் காண முடிகின்றது. குறிப்பாக தனியார் மருத்துவக் காப்பீட்டு ஊழியர்கள் இனிக்க இனிக்க பேசி, முழு உத்தரவாதம் கொடுத்து, முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்பங்களின் கையெழுத்துக்களை பெற்றுக் கொண்டு, வாழ்வதற்கே கஷ்டப்படுபவர்களிடம் தங்களுடைய வாதத்திறமைகளால் எடுத்துரைத்து, நீங்கள் எங்களிடம் மருத்துவ காப்பீட்டில் இணைகின்ற பொழுது, அத்தனை மருத்துவமும் இலவசமாக கிடைக்கும் அதற்கு நாங்கள் பொறுப்பு என்று நம்ப வைத்து சேர்க்கிறார்கள். பிறகு பிரிமியம் தொகையையும் ஆண்டுதோறும் முழுமையாக வசூலிக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் கொடுக்கின்ற பிரிமியம் தொகையிலிருந்து தான், ஒரு சிலருக்கு நோய் ஏற்படுகின்ற பொழுது நிதி கொடுக்க வேண்டிய நிலைக்கு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் இத்திட்டத்தில் சேர்ந்து நோய் ஏற்படுகின்ற பொழுது மருத்துவ காப்பீட்டு நிறுவன ஊழியர்களை தொடர்பு கொள்கின்ற பொழுது முறையான வழிகாட்டுதல்களை கொடுக்காமல் இருப்பதையும் குறிப்பிட்ட நோய்க்கு இங்கு சிகிச்சை காப்பீட்டில் இல்லை என்னும் பதிலையே பெரும்பாலானவர்கள் பெற்று வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இதனை அனுபவரீதியாக பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே உணர முடியும். 140 கோடி மக்கள் உள்ள நமது நாட்டில் இப்படிப்பட்ட மருத்துவ இன்சூரன்ஸ் அநீதி தொடர்கதையாக இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் நோயினால் விடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கின்ற நிதியையும் உரிய நேரத்தில் கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழிப்பதும், மிக மிகக் குறைவாக தொகை கொடுப்பதும் என்பது களையப்பட வேண்டும். மருத்துவ காப்பீடு குறித்த மிகத் தெளிவான நிலையை தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்தித்தரவும், நகரம் தோறும் மருத்துவ காப்பீட்டு உதவி மையங்களை ஏற்படுத்தி உதவிடவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது மருத்துவம் வியாபாரம் ஆன நிலையில் மருத்துவக் காப்பீடும் 100% வியாபாரம் ஆகிவிட்டதே என்னும் அவல நிலையை கலைத்தறிய வேண்டும். உடனடியாக அரசு இது குறித்த விரிவான சிந்தனையுடன் தெளிவான நிலைப்பாட்டை பொது மக்களுக்கு தெரியப்படுத்தி, தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களால் மக்களுக்கு முழுமையான விரைவான மருத்துவ காப்பிட் நிதி கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்பதே, மருத்துவ காப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரலாக தமிழகம் முழுதும் உள்ள மருத்துவமனைகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. செவிமடுப்பார்களா? நடவடிக்கை எடுப்பார்களா? அரசுத்துறை அதிகாரிகள்..!.? என்னும் எதிர்பார்ப்புடன் இருக்கும் வேளையில், பொதுமக்களாகிய நாமும் மிகவும் விழிப்புணர்வுடன் மருத்துவ காப்பீடு குறித்த முழு விவரங்களையும் முறையாக தெரிந்து கொண்ட பிறகு மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களில் உறுப்பினராக இணைந்து பிரிமியம் செலுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.