திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்கள் வாங்கச்சென்ற பக்தர்கள் 6 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி கோவிலே உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யக்கூடிய நாட்டிலேயே முக்கியமான கோவிலாகும். திருமலை திருப்பதியில் நடக்கிற பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.
இந்த டோக்கன்கள் 10ந்தேதியான இன்று தான் வழங்கப்பட உள்ளன.
திருப்பதி விஷ்ணு நிவாசம் அருகே உள்ள பள்ளி வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு டோக்கன் வழங்க தயாராக இருந்த நிலையில், நேற்று முதலேஅங்கு கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்து உள்ளது.
நேற்று மாலை கூட்டம் அதிகமான நிலையில், நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயக்கமடைந்து உள்ளார். அவரை மீட்பதற்காக உடனடியாக கதவு திறக்கப்பட்டதும், அந்த கதவுக்குள் நுழைவதற்காக கூட்டம் ஒட்டுமொத்தமாக பாய்ந்தது தான் பெரு நெரிசலுக்கு காரணம். பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு கதவுக்குள் செல்ல முயன்றதால் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெரிசல் தள்ளு முள்ளு என அந்த இடமே களேபரமாக மாறிவிட 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஏராளமானவர்கள் மயக்கமடைந்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த மல்லிகா உயிரிழந்தார். பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலாவும் உயிரிழந்துள்ளார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். நிறைய பேருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான நிர்வாக குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டோக்கன் கவுண்ட்டர்களில் மீண்டும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.