திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று பிரசாதமாக வழங்குவதற்காக 3 டன் சக்கரை, ஒன்றரை டன் கடலை மாவு, பயன்படுத்தி 600 தன்னார்வலர்களுடன் 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வருகிற 10ம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா உலகம் முழுவதிலும் உள்ள பெருமாள் கோவில்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வருடம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருவார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கிட திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில்15வது வருடமாக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. லட்டு தயாரிக்கும் பணிக்காக சர்க்கரை 3 டன், கடலை மாவு 1½ டன், 150 டின் எண்ணெய், திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பிரசாதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் காமாட்சி அம்மன் கல்யாண மண்டபத்தில் நடந்து வரும் இப்பணிகளில், 600 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். லட்டு தயாரிக்க வந்துள்ள தன்னார்வலர்களுக்கு தலைகவசம், முக கவசம், கிளவுஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்ட பாதுகாப்பான முறையில் லட்டு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இந்த பணிகளில் வந்து கலந்து கொள்ளலாம் என்றும் ஸ்ரீவாரி டிரஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் டிரஸ்ட் தலைவர் கே.பி.ஜி.பலராமன், துணை தலைவர் செல்வம், சௌமிஸ் நடராஜன், சங்குராஜ் உள்ளிட்ட ஶ்ரீவாரி டிரஸ்ட் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.