பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம கும்பல் கடந்த 28-ம் தேதி இரவு கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்ற கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில் 14 தனிப்படையினர் இந்த சம்பவம் பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்த போலீசார் விசாரணையில், குடும்ப பிரச்சினையோ, முன்விரோதமோ கொலைக்கான காரணம் இல்லை என உறுதி செய்துள்ள போலீசார், எதனால் இந்த கொலை நடந்தது? விசாரணையை எங்கிருந்து தொடங்குவது எனத்தெரியாமல் திக்கித்திணறுகிறார்கள்.
சம்பவ இடத்தில் எந்த தடயமும் கிடைக்காதது போலீசாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் எந்த சிசிடிவி கேமராவிலாவது பதிவாகி இருக்கலாம் என்பதால் காங்கயம் வரை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள், நகைக்கடைகள் மற்றும் மதுபானக் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை என சகலத்தையும் அலசி ஆராய்ந்து விட்டனர் போலீசார்.
இதுமட்டுமில்லாமல் கொலை நடந்த நாளில் அந்தப்பகுதியில் உலவியவர்களின் செல்போன் விபரங்கள் குறித்தும் தகவல்களை சேகரித்தனர். மேலும் சேமலைக்கவுண்டம்பாளையத்தை சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை அலசி ஆராய்ந்து விட்டனர். 800 பேருக்கும் மேல் விசாரித்து ஆவணப்படுத்தியும் விட்டனர்.
ஆனாலும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இனி டெக்னாலஜி கைகொடுக்காது என்று உணர்ந்த போலீசார் பழைய ஸ்டைல் விசாரணையில் இறங்கினார்கள். சம்பவ இடத்தில் கிடைக்கிற தடயங்கள், பொருட்கள் என ஒன்று விடாமல் சேகரித்தனர். பாதி உறிஞ்சிவிட்டு போடப்பட்ட சிகரெட் துண்டு, காலி குவார்ட்டர் பாட்டில் என ஒன்று விடாமல் தேடி எடுத்து, அவற்றின் நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் ஆராய்ந்தும் விசாரணைக்கு உபயோகமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தவர்களாகவே இருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். புலம்பெயர் வடமாநிலத்தவர்களான பெட்ஷீட் விற்பவர்கள், ஆட்டுக்கல் உள்ளிட்ட வடமாநில தெருவியாபாரிகளின் கைரேகையை சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.
டி.எஸ்.பி., ரேங்க்கில் பல கொலைச்சம்பவங்களில் துப்புத்துலக்கிய 10க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், 40 போலீசார் என 24 மணி நேரமும் கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு தேடினாலும் எந்த ஒரு துப்பும் கிடைக்காததால், இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறது. கடைசியாக போலீசாரின் பிரம்மாஸ்திரமாக இருப்பது, கொலையாளிகள் திருடிக்கொண்டு போன ஐ-போன் தான். அதில் இருந்த சிம் கார்டை தூக்கிவீசிவிட்டு, ஸ்விட்ச் ஆஃப் செய்த கொலையாளிகள், அதை இன்னும் ஸ்விட்ச் ஆன் செய்யாமல் இருக்கிறார்கள். எப்போது அந்த போன் ஸ்விட்ச் ஆன் ஆகும் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள் டி.ஐ.ஜி., தலைமையிலான 14 தனிப்படையை சேர்ந்த போலீசார்.
கொலை வழக்கு விசாரணை முட்டுச்சந்துக்கு கூட வராமல் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கும் நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட அமைச்சராக உள்ள சாமிநாதன் கொலைநடந்த வீட்டுக்கு சென்றபோது, கொலையான செந்தில்குமாரின் மனைவி, போலீஸ் எஸ்.பி., பக்கத்தில் நிற்கும் போதே அமைச்சரிடம் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி போலீசாருக்கு அழுத்தம் ஏற்படுத்தியது.
இப்போது நாளை தொடங்குகிற சட்டப்பேரவை கூட்டம் இன்னொரு அழுத்தமாக மாறி இருக்கிறது. பல்லடம் எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் இந்த சம்பவம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் வழங்கி இருக்கிறார். ஆனால் எங்கிருந்து விசாரணையை தொடங்குவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது போலீஸ். என்னதான் நடக்கிறது என்று வேதனையில் தவிக்கின்றனர் செந்தில்குமாரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர். போலீசாரின் பிரம்மாஸ்திரமான ஐ-போன் எப்போதுதான் ஸ்விட்ச் ஆன் ஆகும் என ஒவ்வொரு நொடியையும் ஒரு யுகமாக கழிக்கிறார்கள் திருப்பூர் மாவட்ட போலீசார்.