திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் திருப்பூர் கோல்டன் நகரில் தங்கி வருகிறார். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருடன் சேர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட நண்பர்களுக்கிடையே கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு இரண்டு தரப்பாக பிரிந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மற்றொரு தரப்பினர் இன்று சமாதானம் பேசுவது போல் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதிக்கு ராஜேஷை அழைத்து வந்து நடுரோட்டில் வைத்து ராஜேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு ரெட் டாக்சியில் தப்பிச் சென்றனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீஸார் உயிருக்கு போராடி வந்த ரமேஷை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். சிசிடிவி காட்சிகள் மூலம் 5 பேர் சேர்ந்து ராஜேஷை தாக்குவது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பிச் சென்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையில் 5 பேர் சேர்ந்து ரவுடியை சரமாரியாக வெட்டி தப்பிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது