திமுக ஆட்சியில் திருப்பூருக்கு எந்த திட்டமும் தரவில்லை... முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி .வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் மற்றும் கழிவு வரி உயர்வு, ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்வு, தொழில் வரி உயர்வு, வணிக நிறுவனங்களிடம் வசூலிக்கும் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு, வரிகளுக்கு அபராதம் போன்றவற்றை திரும்ப பெறுவதற்கும், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும்  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி.வி. ஜெயராமன் துவக்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமை தாங்கினார்.  மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் வரவேற்புரையாற்றினார்.திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு  சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.விஜயகுமார் கழக அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கிய காலை நேரமே ஆயிரக்கணக்கான கழகத்தொண்டர்கள் சாரை சாரையாக வந்து உண்ணாவிரதப்பந்தலில் அமர்ந்தனர்

ந்தப் உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான உடுமலை.கே. ராதாகிருஷ்ணன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான . எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்  மடத்துக்குளம் எம்.எல்.ஏ.,  சி.மகேந்திரன், காங்கயம் ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜன், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சி.சிவசாமி, மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெ.பழனிச்சாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை கழக தலைமை நிலைய செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளரும்,  முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ். பி. வேலுமணி கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு பழரசம் வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது  கழக தலைமை நிலைய செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளரும்,  முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ். பி. வேலுமணி பேசியதாவது: 
திருப்பூர் டாலர் சிட்டி. அந்நிய செலாவணி ஈட்டித்தரக்கூடிய நகரம் ஆகும். இந்த உண்ணாவிரதப்போராட்டம் திருப்பூர்ல் நடந்தது என்றால் அடுத்தது அண்ணாதிமுக ஆட்சிக்கு வரும். புரச்ட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கும்போது, திமுக அரசின் கடுமையான மின்வெட்டு காரணமாக திருப்பூரில் போராட்டம் வைத்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தது. அதே போல இன்றும் எடப்பாடியார் திருப்பூர் உண்ணாவிரதத்துக்கு அனுமதி கொடுத்துள்ளார். இது சரித்திர போராட்டம். 

திருப்பூருக்கு ஒரு ராசி இருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரும். இன்றைக்கு சொத்து வரி வருடத்துக்கு 6 சதவீதம் உயர்த்துவது மக்களை சிரமப்படுத்தக்கூடிய விஷயம். மின்சார கட்டணம் விட்டது. சர்வ சாதாரணமாக பொய் பேசுகிறார்கள். மத்திய அரசானது சில வரிகளை உயர்த்த வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் அதை நாம் கேட்கவேண்டியதில்லை. கொரோனா காலகட்டத்தில் எடப்பாடியார் வரிகளை உயர்த்தக் கூடாது. மக்கள் சிரமப்படுவார்கள் என்று கூறினார்கள். 

அது தான் எடப்பாடியார். ஆனால் திமுக எல்லா வரிகளையும் உயர்த்தி விட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். வாடகை அதிகப்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த மாநகராட்சி மூன்றரை வருஷம் ஏதாவது நல்ல திட்டம் கொண்டு வந்து இருக்கிறதா? எல்லா திட்டமும் அதிமுக கொண்டு வந்தது. திருப்பூருக்கு நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வந்தது அதிமுக தான். திமுக எதையும் செய்யவில்லை. மாநகராட்சியில் எங்கள் கவுன்சிலர்கள் மக்களுக்காக போரட்டம் நடத்தினார்கள். 

ஆனால்  எங்கள் கவுன்சிலர்களை அராஜகமாக குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போடுகிறார்கள். காவல்துறை இதை எல்லாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். காவல்துறை இந்த அரசு தொடரும் என்று நினைக்காதீர்கள். இன்றைக்கு மூன்று கொலை நடந்து கொண்டு இருக்கிறது. மாணவர் சமுதாயம் போதையில் திளைக்கிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் கவுன்சிலர்களை தொட்டீர்கள். அதற்குத்தான் இந்த போராட்டம்.


திமுகவுக்கு அடிமையாக இருக்கிறது காவல்துறை. நாங்கள் காவல்துறையை ஒருபோதும் இடைஞ்சல் செய்வதில்லை. திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. உங்களூக்கே பாதுகாப்பு நாங்கள் தான். எடப்பாடியார் ஆட்சியில் வளர்ச்சியை கொடுத்து இருக்கிறோம். நல்ல சாலைகள், குடிநீர் திட்டம் தந்து இருக்கிறோம். எங்களுடைய கவுன்சிலர்கள் மக்களுக்காக போராடினார்கள். மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து வரிகளையும் ரத்து செய்ய வேண்டும். கண்டிப்பாக எடப்பாடியார் ஆட்சி மலரும். திருப்பூர் மாநகராட்சிக்கு நல்ல திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்து செய்யும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். 

திருப்பூர் மாநக மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:
திருப்பூர் மண்ணிலிருந்து நான் சொல்கிறேன். திமுக கொள்ளையனே வெளியேறு தமிழ்நாட்டு மக்களை கொள்ளையடித்து மக்களை சித்திரவதை செய்து கொண்டு இருக்கும் வெள்ளையனே வெளியேறு. அன்று திருப்பூர் குமரன் போராடி வெள்ளையனை வெளியேற்றினான். இன்று நம் 10 பெண் கவுன்சிலர்கள் புலிகளாகவும், 7 ஆண் கவுன்சிலர்கள் சிங்கங்களாகவும் நின்று போராடி இருக்கிறார்கள். பெண் கவுன்சிலர்களை ஆண் காவலர்களை விட்டு கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம். போராட்டத்தில் கைது செய்த கவுன்சிலர்களை காண ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டார்கள். 
இந்தியாவில் அதிக வரி விதிக்கிற மாநகராட்சி திருப்பூர். அதிமுக ஆட்சியில் வரி உயர்த்தவில்லை. வரியே இல்லாமல் தமிழகத்துக்கு 10 ஆண்டு காலம் நல்லாட்சி தந்தது அதிமுக தான். திருப்பூர் மாநகராட்சியில் எல்லாவற்றுக்கும் வரி. பாதாள சாக்கடை இணைப்புக்கு வரி. இணைப்பே இல்லாவிட்டால் டெபாசிட். குப்பையே அல்லாமல் குப்பைக்கு வரி என வரி மேல் வரி விதிக்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வாடகை ஏறி விட்டது.திருப்பூரில் வேலையே இல்லாத நிலை உள்ளது. 2010 இல் எப்படி திருப்பூர் மக்கள் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்றார்களோ. அது போல இப்போதும் செல்கிறார்கள். அந்த மக்களின் சாபம். மக்களுக்கு எதிராக செயல்படும் இந்த திமுக அரசு வீட்டுக்கு போகும் வரை கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை போராட்டம் நடைபெறும். மீண்டும் எம்.ஜி.ஆர் அம்மா ஆட்சியை எடப்பாடியார் உருவாக்க நாம் அணி திரள்வோம். இவ்வாறு பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார். 
இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் சேகர், ஆனந்தி தம்பி சுப்பிரமணியம், தமிழ்ச்செல்வி கனகராஜ், தங்கராஜ், முத்துச்சாமி, தனலட்சுமி, திவ்யபாரதி பாலாஜி, சகுந்தலா ஈஸ்வரன், தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், சின்னசாமி, சாந்தி பாலசுப்பிரமணியம், புஷ்பலதா தங்கவேலன்,  மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post