*ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு இஸ்லாமிய பக்தர் ஜாகிர் உசேன் அர்பணித்த அற்புத கிரீடம்!* *இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிப்பதாக சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெகிழ்ச்சி!*
இறைவன் முன் அனைவரும் சமம், இறைவனுக்கு எந்த மதமும் ஜாதியும் பாகுபாடும் எப்போதும் எங்கும் கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் சாட்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும் இஸ்லாமியர்களுக்கும் நல்லுறவு உள்ளது என்பதை கோவிலில் உள்ள இரண்டாம் பிரகாரத்தின் ஈசான மூலையில் நாச்சியாருக்கு தனி சந்நிதியே உள்ளது. முகலாய மன்னர் டில்லி பாதுசா படையெடுத்து ஸ்ரீரங்கம் வந்தபோது, டில்லிக்கு அரங்கநாதர் விக்ரகத்தினையும் எடுத்துக்கொண்டு சென்றார். மன்னர் பாதுசாவின் மகளான சுரதானி என்பவர் அந்த ரங்கநாதர் விக்ரகத்தினை கண்டு மகிழ்ந்து தனது மனதை பறிகொடுத்தார். அரங்கநாதரை மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தபோது, இளவரசியான சுரதானி அரங்கநாதரை பிரிய மனமின்றி திருவரங்கத்தினை அடைந்தார். அதனால் இசுலாமிய வழக்கப்படி அகிலும், சந்தனமும் கலந்த தூப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. மேலும் அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையில் காட்சியளிக்கிறார். நாச்சியார் சன்னதியே சாட்சியாக இருக்கும் நிலையில் நிகழ்கால சாட்சியாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பக்தர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட நன்கொடையாளர்களால் ஒரே ரத்தின கல்லில் 160க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்து அழகிய கிரீடத்தை தயார் செய்து கொடுத்து உள்ளனர். ஸ்ரீரங்கம்
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இந்தாண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு புதிய வைர கிரீடம் சாற்ற இஸ்லாமிய பக்தர் ஜாகிர் உசேன் வைர கிரீடத்தை அர்ப்பணித்தார். "திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சாமி மேல் உள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளதாகவும், அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3,160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது,
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்க கல் கொண்டு வரப்பட்டு குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டு ரம்மியமாக உள்ளது. இதனை வடிவமைப்பதற்கு பல ஆண்டுகள்,ஆறு தொழிலாளர்கள் முழுமையாக பணியில் ஈடுபட்டு 34 கேரட்டில் 619 வைரங்கள், கொலம்பியாவில் இருந்து வரவழைத்த 140 கலர் ஸ்டோன்கள் கடைசல் வேலை செய்தும், எமரால்டு இன்கிரீமிங் செய்து, பக்தியுடன் ஆத்மார்த்தமாக பணியில் ஈடுபட்டு தயார் செய்துள்ளனர். உலகில் முதல்முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைர கிரீடம் என்பதும் இதன் தனி சிறப்பாகும். பிறப்பால் தான் இஸ்லாமியராக இருந்தாலும், ரெங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்ததாக கூறிய ஜாகீர் உசேன் மேலும் நெகிழ்ச்சியுடன் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை ரங்கநாதருக்கு சாத்தப்படும் கிரீடத்தை செய்ய கிடைத்த வாய்ப்பு பெருமை என்றும் கூறி
பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை ஶ்ரீநம்பெருமாளுக்கு சாற்ற ஒப்படைத்தார். நமது நாட்டில் ஜாகிர் உசேன் போல எண்ணுற்றோரின் மனநிலையும் அவ்வாறே உள்ளது என்பதும் உறுதி. இதன் மூலம் மதம், ஜாதி, பாகுபாடுகள் என்பது சில கட்சிகளுக்கும், அடிப்படைவாத இயக்கங்களுக்கும் மட்டுமே கண்ணில் புலப்படுகின்றது. பொதுமக்களுக்கு என்றைக்குமே இப்படிப்பட்ட பாகுபாடுகள் தென்படுவது இல்லை என்பது உணர்வுபூர்வமாக வெளிப்படுகின்றது. இறைவனும் அனைவரையும் சமமாகவே பாவிக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சியாக அமைந்துள்ளது. இனியாவது மதமாச்சரியங்களை கடந்து அனைவரும் மனிதநேயத்தோடு வாழ்வோம் என்பதையே இஸ்லாமிய பக்தரின் அன்பு பரிசான இக்கிரீடத்தை தன் தலையின் மீது சுமந்து ஏகாதசி தினத்தில் ஏக உலகத்திற்கும் பாடம் எடுக்க உள்ளார் ஸ்ரீரங்கம் நம் பெருமாள் என்பது உறுதி. நாமும் அவர் போல அனைவரையும் சகோதரர்களாக பாதிப்பு ஒற்றுமையுடன் வாழ்வோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.