டிசம்பர் 7 கொடிநாள் தியாக சீலர்கள் முன்னாள் ராணுவத்தினரை எப்போதும் எங்கும் மதித்து போற்றுவோம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்

டிசம்பர் 7 கொடிநாள்
 தியாக சீலர்கள் முன்னாள் ராணுவத்தினரை எப்போதும் எங்கும் மதித்து போற்றுவோம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்
உலகம் எங்கும் பல்வேறு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்து தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதை கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்து வருகின்றோம். எந்த அளவிற்கு நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவ பலம் அவசியம் என்பதை இதன் மூலம் நாம் உணர முடிகின்றது. அந்த வகையில் ஒரு நாட்டின் ராணுவத்தை வைத்துதான் அதன் வலிமை நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுவதால் தொடர்ந்து ராணுவத்தை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றோம். அப்படிப்பட்ட பலமிக்க ராணுவத்தில் பணியாற்றுகின்ற நமது சகோதர சகோதரிகள், எல்லையை பாதுகாக்க அன்றாடம் படுகின்ற துன்பத்தின் அளவிற்கு எல்லையே இல்லை. சாதாரண மழை வெள்ளத்தைக் கூட தாங்க முடியாமல் தவிக்கின்ற நாம் கடும் குளிரில் உயர்ந்த மலைகளில் கொட்டுகின்ற உறை பனியில், குடிக்கக்கூட நீரின்றி உறக்கமின்றி உயிரை துச்சமென நினைத்து ஓயாது உழைக்கின்ற ராணுவ வீரர்களின் ஒப்பற்ற சேவையை அனைவரும் போற்றிட வேண்டும். குறிப்பாக ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் முன்னாள் ராணுவத்தினர் களுக்கு உதவுவதற்காகவும், வீர மரணம் அடைந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவிடவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தினம் கொடிநாள் உருவாக்கப்பட்டு, அதில் அனைவரும் நன்கொடைகள் வழங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி அதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு முன்னாள் ராணுவத்தினருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. ராணுவ வீரர் அல்லது அவர்கள் சார்ந்த உறவினர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் தியாகம் நன்கு நேரில் தெரியவரும். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த அமரன் திரைப்படம் கூட ராணுவவீரரின் தியாகத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது. பொதுமக்களாகிய நாம், 15 முதல் 30 ஆண்டுகள் வரை குடும்பத்தை விட்டு பிரிந்து, பண்டிகைகளில் விழாக்களில் பங்கேற்காமல் இன்ப,துன்ப உறவுகளை இழந்து பணியாற்றி பிறகு, வாழ்வின் இளமையை நாட்டிற்காக கொடுத்து விட்டு, பணி ஓய்வு பெற்று நம்மோடு வாழ்கின்ற முன்னாள் ராணுவ வீரர்களை அவரவர் கிராமத்தில் உள்ள அனைவரும் போற்ற வேண்டும். குறிப்பாக பல்வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நாம், அரசு விழாக்களாக இருக்கலாம், பொது நிகழ்ச்சிகளாக இருக்கலாம் ஏன் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகளில் கூட முன்னாள் ராணுவத்தினர்கள் வந்தால் முதலில் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கான தனி மதிப்பையும் மரியாதையும் கொடுத்து உயர்த்திடும் பண்பான போக்கினை அனைவரும் பின்பற்றுவதே, ராணுவத்தில் பணியாற்ற முடியாமல் நாட்டை நேசிக்கும் நாம் செய்கின்ற பிரதி உபகார செயலாக அமையும் என்பது உறுதி. மேலும் கொடி நாள் நிதியை தாராளமாக வழங்குவோம் முன்னாள் ராணுவ வீரர்களை என்றைக்கும் எங்கும் போற்றுவோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post