நிலச்சரிவில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்பு... அதிர்ச்சியில் மீளாத திருவண்ணாமலை மக்கள்!

 ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டை ஒரு உலுக்கு உலுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கடலிலேயே நின்று ஆட்டம் காட்டியது. நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, புதுச்சேரியில் கடந்த வாரமே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அங்கு பெரும் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய சேதம் எதையும் ஏற்படுத்தாததால் மக்கள் தப்பித்தனர். 

தொடர்ச்சியாக சென்னைப்பக்கம் கடந்த 2 நாட்களாக பெருமழை வந்த நிலையில், சென்னைவாசிகள் வழக்கமான மழைக்கால பாதிப்புகளுக்கு ஆளானார்கள்.

ஆனால் சென்னை தவிர்த்த வடதமிழ்நாட்டு மக்களுக்கு கடந்த 2 நாட்கள் பெரும் அதிர்ச்சியை தருவதாகவும், சோகமானதாகவும் மாற்றி விட்டது இந்த ஃபெஞ்சல் புயல்.

சனிக்கிழமை காலை திருவண்ணாமலையில் ஆரம்பித்த தொடர்மழை, ஊரையே அல்லோலப்படுத்தியது. இந்த மழைக்கு பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களும், புதுச்சேரியும் தப்பவில்லை. வழக்கத்துக்கும் மாறாக எங்கும் வெள்ளக்காடாக இருந்தது.

ஆனால் திருவண்ணாமலை மக்களுக்குத்தான் ஃபெஞ்சல் புயல் பெரும் அதிர்ச்சியை தந்து உள்ளது. ஞாயிறன்று திருவண்ணாமலையில் 16 செண்டி மீட்டர் வரை பெய்த பேய் மழை, ஊர் முழுக்க வெள்ளக்காடாக மாறச்செய்தது. அண்ணாமலை மலைக்கு பின்னால் உள்ள வ.உ.சி., நகரில் திருவண்ணாமலை மலையில் மண்டரிவு ஏற்பட்டது தான் மக்களுக்கு பேரதிர்ச்சி. சாதாரணமாக மழை பெய்தால், திருவண்ணாமலை மலை  மேல் இருந்து வெள்ளம் வரும். அது போலத்தான் மழைவெள்ளம் வருவதாக அருகே வசிப்பவர்கள் நினைத்துள்ளனர். 

ஆனால், மலையே சிவனாக வழிபடப்படும் திருவண்ணாமலை சரிந்து 2 வீடுகளை சேர்ந்த 7 பேர் நிலச்சரிவு இடுபாடுகளில் சிக்கியது தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. 

ராஜ்குமார் அவரது மனைவி மீனா,  மகன் கௌதம், மகள் இனியா, மகா , வினோதினி, ரம்யா மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்கள் 3 பேர் என மொத்தம் 7 பேர் மலை சரிந்ததில் மண்ணில் புதைந்தனர்.

இந்த நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

சம்பவ இடத்தை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படையினர் மீட்புப்பணியில் இறங்கி ஓயாமல் பணியாற்றி வருகிறார்கள். 170 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், திங்கள்கிழமை மாலை 5 பேர் இறந்த நிலையில் சகதி மண்ணில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். ஒரு உடல்பாகம் மட்டும் மீட்கப்பட்டு உள்ளது.

வீட்டில் இருந்து ராஜ்குமார், கவுதம், விநோதினி, மீனா, இனியா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

இதனால் அந்தப்பகுதி மக்கள் கண்ணீர் கடலில் மூழ்கி உள்ளனர். தீபத்திருவிழா தொடங்கினாலே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் திருவண்ணாமலை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளார் அண்ணாமலையார். 

இன்னமும் 2 பேரின் உடல்கள் மீட்கப்படும் பணிகள் நடந்து வருகிறது.  மிகவும் கஷ்டப்பட்டு, சந்துப்பகுதியில், மலைச்சரிவு மண்ணைத் தோண்டி அகற்றியும், கற்களை அகற்றியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்புப்பணி நடைபெறும் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து சிக்கி உள்ளதால் மீட்புப்பணிகள் கடினமாகி உள்ளது. 


Previous Post Next Post