திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, மாநில அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு ஒன்றிய அரசு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது ஆகியவற்றைக் கண்டித்து திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை, தொழில் அமைப்புகள் டிசம்பர் 18ஆம் தேதி நடத்தும் கடையடைப்புப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய பாஜக அரசு பின்பற்றும் கண்மூடித்தனமான கார்ப்பரேட் ஆதரவு தாராளமயக் கொள்கைகளால் ஏற்கெனவே சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கொரோனா பொது முடக்கம், மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளால் ஏராளமான சிறு, குறு, நடுத்தரத் தொழில் உற்பத்தியாளர்கள் நிலைகுலைந்து போய், பலர் இத்தொழிலை விட்டே வெளியேற்றப்பட்டு விட்டனர்.
ஒன்றிய அரசு நேரடியாக நடைமுறைப்படுத்தும் கொள்கைகள் போதாதென்று, மாநில அரசுகளையும் நிர்பந்தம் செலுத்தி தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்த முயற்சி செய்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரியை உயர்த்தினால்தான் 15ஆவது நிதிக்குழு மானியத்தை வழங்க முடியும் என நிர்பந்திக்கின்றனர். நகர் பாலிகா உள்ளாட்சி சட்டத்துக்கு எதிராக, மாமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் நேரடியாக அரசு உத்தரவு மூலம் ஜனநாயக விரோதமாக சொத்து வரி உயர்த்தப்படுகிறது. அரையாண்டு வரியை செலுத்தாவிட்டால் ஒரு சதவிகித வரித் தொகை அபராதம், ஆண்டுக்கு ஆறு சதவிகித வரி உயர்வு என தன்னிச்சைப் போக்குடன் அமல்படுத்தப்படும் இந்த வரி விதிப்பினால் சாமானிய மக்களுக்கு மட்டுமின்றி, சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கான வாடகைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்திருப்பது ஒன்றிய அரசின் மற்றுமொரு கொடூரத் தாக்குதலாக உள்ளது. மின் கட்டண உயர்வும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் தாக்குப்பிடிக்க முடியாததாக உள்ளது.
இவ்வாறு ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைகள், திட்டமிட்டு சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினரை அழித்துவிட்டு, தொழில் மற்றும் சந்தை வாய்ப்பைப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றி, கொழுத்த லாபம் பெறுவதற்கு வகை செய்யப்படுகிறது.
இதனால் சிறு குறு நடுத்தர தொழில் மற்றும் வர்த்தக துறையினர் கடன் வலையில் சிக்கி தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால்
பல லட்சக்கணக்கான மக்களின், குறிப்பாக பெண்களின் வேலைவாய்ப்பும் பறிக்கப்பட்டு ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் நுண்நிதி நிறுவன கடன் வலையில் சிக்கி வாழ்வில் மூச்சுத் திணறி வருகின்றனர்.
எனவே இத்தகைய மோசமான கொள்கைகளுக்கு எதிராக, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வணிக கட்டிடங்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றுக்கு எதிராக திருப்பூரில் அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை மற்றும் தொழில் அமைப்புகள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்து கடைகளில் கறுப்புக் கொடி ஏற்றுவதுடன், டிசம்பர் 18ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திருப்பூர் மாவட்டத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக நடத்தும் இந்த போராட்டம் நியாயமானது. ஜனநாயகப்பூர்வமானது. உள்நாட்டுத் தொழில், வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறது.
அனைத்துப் பகுதி சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர், வணிகர்கள், வியாபாரிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை மாநில அரசு கைவிடுவதுடன், வணிக கட்டிடங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.