விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட் அருகே உள்ள நேரு சிலை டாஸ்மாக் மதுக்கடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரைத் அடித்து உதைத்து உள்ளனர்.
இதனால் காயம் அடைந்த இசக்கி, ரத்தக் காயங்களுடன் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், இசக்கியைத் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில், அவர்கள் நேரு சிலை பின்புறம் இருக்கும் மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்தது தெரிய வந்து உள்ளது.இதனையடுத்து, அவர்களிடம் விசாரித்த வடக்கு காவல் நிலைய காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர், மறுநாள் காலை அந்த கும்பலை காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தக் கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் போதையிலும், ஆத்திரத்திலும் இருந்த கும்பல், திடீரென்று விசாரணைக்கு வந்த போலீசாரை தாக்கி உள்ளனர். சரமாரியாக இரண்டு போலீஸ்காரர்களையும் அடித்து உதைத்து உள்ளனர். இந்த காட்சிகளை சிலர் வீடியோவும் எடுத்து உள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்து மற்ற போலீசார் வந்து அடிபட்ட போலீஸ் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தில் ஆவரம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா மற்றும் பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.
போலீசாரை போதைக்கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.