ரேஷன் கடை திறப்பு இலவச அரிசி வழங்கல் அறிவிப்பு தற்காலிகமானதா? நிரந்தரமானதா? புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஆர். எல் வெங்கட்டராமன் கேள்வி?

ரேஷன் கடை திறப்பு இலவச அரிசி வழங்கல் அறிவிப்பு தற்காலிகமானதா?நிரந்தரமானதா? ரங்கசாமிக்கு ஆர். எல் வெங்கட்டராமன் கேள்வி?

தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகளை திறந்து இலவச சர்க்கரை அரிசி வழங்கப்படும் என்கிற முதல்வர் அறிவிப்பு மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், தீபாவளிக்குள் மூடப்பட்டிருக்கின்ற ரேஷன் கடைகளை திறந்து 2 கிலோ இலவச சர்க்கரையுடன் 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் , புதுவை மக்களின் சார்பாகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஆனால் இதில் தொடர்ந்து பேசிய முதல்வர் மக்களுக்கு இலவச அரிசியை வீடு தேடி வழங்க ஆலோசித்து வருகிறோம் என்றும் ரேஷன் கடை திறந்ததும் இலவச அரிசியை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. அப்படியென்றால் தீபாவளிக்குள் ரேஷன் கடையை திறந்து இலவச சர்க்கரை அரிசி வழங்குவோம் என்ற அறிவிப்பில் தீபாவளி முடிந்ததும் ரேஷன் கடை மூடிவிடுவார்களா அல்லது ரேஷன் கடை திறக்காமல் ரேஷன் கடை ஊழியர்களை வைத்து ஒரு மாதம் சம்பளம் கொடுத்து வீடு தேடி இலவச சர்க்கரை , அரிசி கொடுத்து விட்டு ரேஷன் கடையை திறக்காமல் விட்டு விடுவார்களோ என்று மக்கள் அச்சத்தில் குழம்பி போய் உள்ளனர். இதனை ரங்கசாமிதான் தெளிவுபடுத்த வேண்டும். அடுத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் மட்டும் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ள நிலையில் , இந்த தீபாவளி பண்டிகை நேரத்தில் ஒரு மாத சம்பளம் ஊழியர்களுக்கு எப்படி ஏற்புடையதாக இருக்கும். ஊழியர்களின் சம்பள பாக்கியை முழுமையாக கொடுக்க வேண்டும். அப்படியென்றால் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு தீபாவளிக்காக மட்டுமே ஒழிய நிரந்தரமாக ரேஷன் கடையை திறப்பதற்கோ , தொடர் நிலையாக இலவச அரிசி வழங்குவதற்கோ இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த அறிவிப்பால் மக்கள் குழம்பி போய் உள்ளனர்.  
இலவச அரிசியாக வழங்கும் திட்டம் இந்தியாவில் பல மாநிலங்களில் தோல்வி அடைந்த காரணத்தினால் தான் , புதுவையில் கிரண்பேடி துணை நிலை ஆளுநராக இருந்த போது அரிசிக்கு பதில் பணமாக வழங்கப்பட்டது. அப்படியிருக்க இப்போது மீண்டும் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இருப்பது மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா. பல விஷயங்களில் மத்திய அரசிடம் தோற்று போன ரங்கசாமி எந்த நம்பிக்கையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவு கொடுக்காது என்று தெரிந்தும் அனுப்பியிருப்பது , தேர்தல் நேரத்தில் இலவச அரிசி வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் , மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பித்து கொள்வதற்காகத்தான் முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது. இது வரை அறிவித்த பல திட்டங்கள் நடைமுறை படுத்தபடாமல் கிடப்பில் இருப்பதை மக்கள் உணர்ந்து தெளிவாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். ஆகவே ரேஷன் கடை திறப்பு இலவச அரிசி வழங்கல் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்று மக்களுக்கு முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் .என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்
Previous Post Next Post