நதிகளை வணங்கி பாதுகாப்போம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வலியுறுத்தல்
வட இந்தியாவில் நதிகள் வழிபாடு அதிக அளவில் இருப்பதனால் வறட்சி என்னும் சொல்லுக்கே இடமில்லாமல் தொடர்ந்து தண்ணீர் பஞ்சமின்றி கிடைத்து பல்வேறு மாநிலங்கள் வளம் பெருகி விவசாயம் செழித்து இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த வகையில் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஓடுகின்ற காவேரி நதியை போற்றிப் பாதுகாத்து வணங்க வேண்டும் என்னும் உயர்ந்த சிந்தனையில் *சுவாமி ராமானந்த மகராஜ்* தலைமையில் 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் காவிரி நதி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மலை தலை காவிரியில் இருந்து தொடங்கி காவிரி நதி வழிந்தோடும் அனைத்து நகரம் கிராமம் வழியாக சென்று மயிலாடுதுறை துலாக்கட்டம் மற்றும் பூம்புகாரில் காவிரி கலக்கும் இடத்தில் நிறைவு செய்கிறார்கள். யாத்திரையில் நதிக்கு ஆரத்தி வழிபாடு நடத்தி பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை நேரில் சந்தித்து நதிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட வருகிறது. குறிப்பாக நதிகளில் பிளாஸ்டிக், குப்பை, கூளங்களை கொட்டக்கூடாது. பழைய கிழிந்த அசுத்தமான துணிகளையும், தேவையற்ற பொருட்களையும் இறைச்சி கழிவுகளை வீசி செல்வது, மலஜலம் கழிப்பது போன்றவை மிகவும் பாவச் செயல். கழிவு நீர் மற்றும் ரசாயன கழிவுகளை ஆறுகளில் விடுவதால் தூய்மையான தண்ணீர் வீணாகி அசுத்தம் ஏற்படுகிறது. மேலும் இப்படி அசுத்தமான தண்ணீரை குடிக்கின்ற கால்நடைகள் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. விவசாயத்திற்கு பயன்படுத்துகின்ற பொழுது அதுவும் கெட்டுவிடுகிறது. ஆகவே அனைவருக்குமான ஆறுகளை போற்றி பாதுகாப்பது அனைவரின் கடமையாகும் என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் துறவியர்களின் அக்கறையை அனைவரும் பாராட்டுவோம். மேலும் இவர்களின் பிரச்சார விழிப்புணர்வால் பெருமளவு மக்கள் தாங்கள் செய்கின்ற பாவச்செயல்களை எண்ணி வருத்தம் அடைந்து மீண்டும் ஆறுகளில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தியதால் தண்ணீர் அசுத்தம் அடைவது சற்றே குறைத்துள்ளதை காண முடிகின்றது. இருந்த பொழுதிலும் முற்றிலுமாக தடுக்கப்படும் நிலையை அனைவரும் மனது வைத்து உருவாக்க வேண்டும். இனியாவது பெரியோர் சொல்லை மதித்து ஆறுகள், நதிகள், நீர்நிலைகளை சுத்தமாக்கி நம் வாழ்வை வீணடிப்பதை தவிர்க்க சபதம் ஏற்போம். நாமும், எதிர்கால நமது சந்ததிகளும் ஆரோக்கியமாக வாழ அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாப்போம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.