பெரியார் முதல் மூவேந்தர் வரை... மாநாட்டு கட் அவுட்டுகளில் என்ன சொல்ல வருகிறார் விஜய்!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள். 85 ஏக்கரில் மாநாட்டு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. 200 ஏக்கர் நிலம் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டு பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.  மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலை நோக்கமாக கொண்டு கட்சியின் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 

விஜய் மாநாட்டில் என்னென்னவெல்லாம் இருக்கிறது என்று தமிழக ஊடகங்கள் அனைத்துமே தொடர்ச்சியாக பேசி வருகின்றன.


இந்த மாநாட்டு திடலில் 101 அடி  உயர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலும் உருவாகும் கட்சிகள் திராவிடம் என்ற சொல்லை பெயரிலும், கருப்பு நிறத்தை கொடியிலும் கொண்டிருக்கின்றன. ஆனால், விஜய் கட்சிக்கொடியில் கருப்பு நிறம் இல்லாமல் மஞ்சள், சிவப்பு நிறங்கள் இருக்கிறது.

 
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுத் திடலில் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், சுதந்திரப்போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், பெரியார், பி.ஆர். அம்பேத்கர், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை வெற்றிக்கொள்கை மாநாடு நடத்தும் திடலில் இப்போது இந்த கட் அவுட்கள் தான் பேசுபொருளாகி உள்ளன. 

விஜய் கட்சியின் கொள்கை என்ன என்பது நாளைய மாநாட்டி மேடையில் விஜய் பேசிய பின்னரே தெரியவரும். ஆனால் மாநாட்டு திடலில் உள்ள கட் அவுட்களில் வைக்கப்பட்டுள்ள தமிழன்னையின் கட் அவுட், சேர், சோழ, பாண்டிய மன்னர்கள் கட் அவுட்கள், சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் கட் அவுட் எல்லாம் வைக்கப்பட்டு இருப்பது, தமிழக அரசியலில் புதுமை தான் என்று அரசியல் நோக்கர்கள் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டை ஆட்கொண்டிருக்கும் திராவிட சித்தாந்தம் கொண்ட திமுக கட்சி வண்ணச்சேலை அணிந்து பொட்டு வைத்த தமிழன்னையை முன்னிலைப்படுத்துவது இல்லை. வெள்ளை நிறச்சேலை அணிந்த ’தமிழணங்கு’ முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதே போல திராவிட கட்சிகள் பெரியார்,  போன்ற தலைவர்களை முன்னிலைப்படுத்தும் நிலையில், விஜய் கட்சி மாநாட்டில் அவர்களுடன் சேர்த்து, காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார் கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடலூரின் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளை முன்னிலைப்படுத்தும் விதமாக கட் அவுட் வைக்கப்பட்டு உள்ளது.

இதையெல்லாம் தாண்டி, முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால், சேர, சோழ, பாண்டிய மன்னர்களை திராவிடக் கட்சிகள் முன்னிலைப்படுத்துவது கிடையாது. ஆனால் விஜய் கட்சி மாநாட்டு திடலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட் அவுட்டுகளும், அதற்கு பக்கத்திலேயே விஜய் கட் அவுட்டும் அமைக்கப்பட்டு உள்ளது. 

அதே நேரம் திராவிட கட்சி தலைவர்களான பெரியாரும்,  விஜய்யின் மாநாட்டுத் திடலில் இருக்கிறார்கள். 

மாநாட்டுத்திடலின் முகப்பில் ராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, பூலித்தேவன், மருது சகோதரர்கள், ஒண்டிவீரன், அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு முத்தரையர் ஆகிய கட் அவுட்களும் இடம்பெற்றுள்ளன.

ஆக விஜய் கட்சி மாநாட்டு திடல் கட் அவுட்டுகளை பார்க்கும் போது, முழுமையாக திராவிடக் கொள்கையிலிந்து சற்றே வேறுபட்டு, மூவேந்தர்கள் முதல் ராஜராஜ சோழன் வரை ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது. அதே நேரம் பெரியார், அம்பேத்கர் கட் அவுட்டுகளும் இருக்கிறது. 

எனவே தமிழக வெற்றிக்கழகமானது முழுமையான திராவிட சித்தாந்தமா இல்லை வலதுசாரிகளின் சித்தாந்ததையும் பின்பற்றாமல் நடுநிலையாக அனைத்து மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. என்னதான் பேச்சுகள் பேசப்பட்டாலும், நாளைய மாநாட்டில் விஜய் பேசிய பின்னர் தான் தமிழக வெற்றிக்கழக கொள்கை என்ன என்பது தெரியவரும். 
Previous Post Next Post