கோவையில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்... சுதாரித்த டிரைவரால் தப்பிய பயணிகள்

பழனியில் இருந்து கோவை வந்த அரசு பஸ் கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே தீப்பிடித்து எரித்து நாசமானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழனியில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவை நோக்கி அரசு பஸ் ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. பஸ்சை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்தனர். 

அந்த பஸ் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள மயிலேறிபாளையம் பிரிவை கடந்து வந்தபோது என்ஜினில் இருந்து புகை வர ஆரம்பித்து உள்ளது.  இதை பார்த்த பஸ் கண்டக்டர்  கதிரேஷ், உடனடியாக டிரைவரிடம் கூறியுள்ளார்.

இதை அடுத்து ஒத்தக்கால் மண்டபம் அடுத்த பிரீமியர் நகர் பகுதியில் பஸ்சை நிறுத்திய டிரைவர் பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார்.

அதற்குள் மள மளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்க, உடனடியாக அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து த தீயை அணைத்தனர்.

இருப்பினும் அந்த பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- முருகராஜ்

Previous Post Next Post