மயிலாடுதுறை, சீர்காழி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 4 இட்லி 50 ரூபாய் என்று அதிக விலையில் விற்பனை! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு செல்வதற்காக இன்று காலை 7:30 மணியளவில் ரயிலில் ஏறினேன். அங்கு பிளாட்பார்மில் இட்லி, பொங்கல், வடை விற்பனை செய்த நபரிடம் இட்லி வாங்கினோம். அதன் விலை 50 என்றார். 4 இட்லிக்கு 50 ரூபாய் என்பது மிகவும் அதிகமாக இருந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. ரயில்வேதுறை உணவுகளுக்கான விற்பனை விலை மற்றும் அளவு நிர்ணயம் செய்த பொழுதும் இப்படிப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்கின்ற நபர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக காலை,மதியம், இரவு வேலைகளிலும் அதிக அளவில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற ரயில் நிலையத்தில் இப்படிப்பட்ட அதிக விலையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வது என்பது ஏற்கமுடியாது. நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றனவா என்பதை ரயில்வே துறை அதிகாரிகள் அவ்வப்பொழுது திடீர் ஆய்வு செய்து தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்காலத்தில் அவர்களுக்கான உணவு விற்பனை ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். மேலும் உணவின் எடையையும் தரத்தையும் உறுதி செய்யவும் நுகர்வோர் என்ற முறையில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை அனுப்பியுள்ளார்.