நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு 100 நாள் வேலை வாய்ப்பு இழப்பு முதலமைச்சரின் கனிவுப் பார்வை தேவை- சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம்

*நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு! 100 நாள் வேலை வாய்ப்பு இழப்பு! முதலமைச்சரின் கனிவுப் பார்வை தேவை- சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் !* 

 தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் நகராட்சிகளுடன் பல்வேறு கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ள பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், சிறப்பு நகராட்சிகளாகவும் உயர்த்துவதற்கு தேவையான மக்கள் தொகையை அதிகரிக்க செய்திடவே அருகில் உள்ள கிராமங்களை இணைக்கும் முடிவுகளை மேற்கொண்டு வருவது வளர்ச்சியை நோக்கியதாக கருதப்படுகின்றது. அதேசமயம் அவ்வாறு இணைக்கப்படுகின்ற கிராம ஊராட்சிகளின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இந்திய நாட்டில் உள்ள 140 கோடி மக்கள் தொகையில் 80 சதவீதம் கிராமங்கள் தான் இருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் குறிப்பிடப்படும் எண்பது சதவீத கிராமங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக 40% விவசாயக் கூலி தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். 140 கோடி மக்களின் வாழ்வாதாரமும் அரசுக்கு முக்கியமானது என்பது உறுதி. அந்த வகையில் பல பிரிவுகளாக சிந்திக்கின்ற பொழுது மக்களின் வரிப்பணத்தில் மத்திய மாநில அரசின் சம்பளத்தை பெறுகின்றவர்கள் ஒரு பிரிவு. வியாபாரம் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் ஒரு பிரிவு. தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஒரு பிரிவு. விவசாய சார்ந்த பணிகளை மேற்கொள்வோர் ஒரு பிரிவு என்று உள்ளது. விவசாயம் சார்ந்தவர்களே அதிக அளவில் கிராம ஊராட்சிகளில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் குறிப்பாக தமிழ்நாட்டில் இலவச மின்சாரம், தண்ணீர், மானிய விலையில் உரம், இடுபொருள், வங்கியில் வேளாண் கடன்கள், உற்பத்தி பொருட்களை அரசாங்கமே பெற்றுக் கொள்ளும் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்டவைகளை அரசாங்கம் வழங்கி வருவதை அனைவரும் அறிவோம்.மேலும் நாட்டில் உள்ள அத்தனை பேருக்கும் அரசு வேலை வழங்கவும் இயலாது என்பதால், இயற்கையாகவே பெரும்பாலானவர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய விவசாயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இயற்கைப் பிரச்சினைகள், காலநிலை மாற்றங்கள், அதனால் ஏற்படும் சீற்றங்கள் போன்றவற்றின் தாக்கங்களால் அதிக நாட்கள் போதிய வேலை கிடைக்காமல் கிராமப்புறங்களில் பலர் வாடுகிறார்கள் அவர்களுடைய வாட்டத்தை போக்க வேண்டும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ஆண்டிற்கு குறைந்தது நூறு நாட்கள் உறுதியளிக்கும் வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி உள்ள திட்டம் இன்றைக்கும் கிராமங்களின் வறுமையை போக்கும் ஒரு தொழிலாகவே இருந்து வருகிறது. ஆண்டுக்காண்டு அதன் வேலை நாட்களை அதிகரிக்க செய்வதும், அதன் சம்பளத்தை உயர்த்துவதும் கூட தற்பொழுது நடந்து வருவதால் இத்திட்டத்தில் இணைகின்றவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகின்றது. கடந்த காலங்களில் இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் இருந்ததை கண்டறிந்து அவற்றைக் களைவதற்காக அனைத்தும் டிஜிட்டல்மயமாக செய்யப்பட்டதால் வேலைக்கேற்ற ஊதியம் முறையாக அவர்கள் வங்கிக் கணக்குக்கு செல்வதால் பயணாளி தொழிலாளர்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாநகராட்சி , நகராட்சிகளோடு நூற்றுக்கணக்கான விவசாயம் சார்ந்த கிராமங்கள் இணைக்கப்படுவதாக வெளியிடப்பட்ட செய்தியால் மாநகராட்சி மற்றும் நகராட்சியுடன் இணைகின்ற கிராம ஊராட்சிகளுக்கு இனி 100 நாள் வேலை கிடைக்காது எனும் செய்தி காட்டுத்தீயாகப் பரவி குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் போன்ற முற்றிலும் விவசாயம் சார்ந்த கிராம ஊராட்சிகள் குறிப்பாக மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள மயிலாடுதுறை ரூரல், மன்னம்பந்தல் ஊராட்சி சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் களமிறங்கி உள்ளார்கள். இக் கிராமங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது புள்ளி விவரங்களில் கிடைக்கும் பதிலாக உள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் இப்படிப்பட்ட போராட்டங்கள் வெகுவாக நடைபெற்று வருகின்றன. 100 நாள்வேலை இழப்பு என்னும் ஐயம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் கஷ்ட ஜீவத்திற்கு தள்ளப்படுகின்ற நிலை கூட ஏற்படலாம். நகரங்களோடு இணைக்கப்பட உள்ள ஊராட்சி கிராமங்களில் இதுவரை பணியாற்றி 100 நாள் திட்டத்திற்கான அடையாள அட்டையைப் பெற்று பணியாற்றி, சம்பளம் பெறுபவர்கள் பட்டியலை தனியாக எடுத்து அவர்களுக்கு மீண்டும் அதே போன்றதொரு பணி கிடைப்பதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். எந்த அளவிற்கு நகர முன்னேற்றம் முக்கியமோ அந்த அளவிற்கு, அந்த நகரத்தோடு இணைகின்ற கிராமங்களின் மக்களின் வாழ்வாதாரமும் முக்கியம் என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் அவ்வாறு நகரங்களுடன் இணைகின்ற கிராம ஊராட்சிகள் ஏற்கனவே இருக்கின்ற நகரத்திற்கு இணையாக சாலைகள் முதல் அனைத்து வசதிகளும் மேம்படுவதற்கு குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் தேவைப்படும் என்பது நிதர்சனமான உண்மை. அதுவரையாவது இணைக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை அனுமதிக்கும் ஒரு சிறப்பு உத்தரவை கூட முன்னெடுக்கலாம். ஆகவே உடனடியாக இவ்விஷயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு இப்பிரச்சனையில் தனி கவனம் செலுத்தி தேவை ஏற்படும் சட்டத் திருத்தங்களை ஏற்படுத்தியும் சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் மீண்டும் 100 நாள் வேலை ஏற்கனவே செய்தவர்களுக்கு கிடைக்கின்றதொரு வழிமுறையை உருவாக்கித் தர வேண்டும். இல்லையேல் தமிழ்நாடு அரசே அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான திட்டத்தை புதிதாக தீட்டி 100 நாள் வேலை திட்டத்திற்கு நிகரான புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் வயிறார வாழ வேண்டும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற எண்ணத்திற்காக திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அறிஞர் அண்ணாவும் டாக்டர் கலைஞரும் முன்னெடுத்த இப்படிப்பட்ட திட்டங்கள் முடக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்பதே தற்போதைய மக்களின் பிரதான வேண்டுகோளாக உள்ளது. தமிழ்நாட்டில் படித்து பட்டம் பெற்று வேலையில்லாத இளைஞர்களின் நிலையை உணர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களுடன் பேசி தமிழகத்திற்கு வரவழைத்து தொழில்களை தொடங்கி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் முதல்வர் அவர்கள் பெண்கள் சார்ந்த இந்த விஷயத்திலும் நல்லதொரு முடிவை தாயுள்ளத்தோடு விரைந்து அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Previous Post Next Post