உதயநிதி துணை முதல்வர் வரவேற்போம், வாழ்த்துவோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்
தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பது உறுதியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி இருந்தபொழுது முரசொலியின் நிர்வாகப் பொறுப்பு முழுவதும் உதயநிதி வசம் ஒப்படைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். என்றைக்கு அப்பொறுப்பு கிடைத்தது அன்று முதல் உதயநிதி முழுமையாக கட்சிப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே வந்துள்ளார். மேலும் பத்திரிக்கை துறையில் பொறுப்பேற்கின்ற பொழுது அனைத்துத் துறை சார்ந்த வரலாறுகளும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் இயல்பாகவே அவருக்கு கிடைத்துவிடும். அதேபோல அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் தனது உதிரத்திலும் ஒவ்வொரு அணுவிலும் கூட அரசியல் பிரிக்க முடியாததாகவே இருக்கும் என்பதும் உறுதி. அவர் கலைஞானம் பெற்றதால் தான் நடிப்புத் துறையிலும் சிறப்புடன் பணியாற்ற முடிந்தது. அந்த வகையில் பாரம்பரியமிக்க திராவிட குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் அன்றாடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு மாபெரும் இயக்கத்தின், தலைவரின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்ணுறுகின்ற காரணத்தினால் இயல்பாகவே அரசியல் ரீதியான ஆற்றலும் தகுதியும் கிடைத்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. மேற்கூறிய காரணத்தினாலும் கலைஞர் கருணாநிதி மறைவிற்குப் பிறகு நடைபெற்ற பல்வேறு தேர்தல்களை சந்தித்து பிரச்சாரங்களை மக்களிடையே மேற்கொண்டு அவர்களின் நன்மதிப்பையும் பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று பிறகு அமைச்சராக சுற்றிசுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியவராக இருப்பதினால் முதல்வருக்கு உதவியாக துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படுவதில் தவறேதும் இருக்க முடியாது. குறிப்பாக எவ்வளவோ அனுபவம் மிக்க மூத்த தலைவர்கள் இருந்த பொழுதிலும், எவ்வித அடிப்படை அரசியல் அனுபவமும் இல்லாத, ஆந்திராவில் நடிகராக இருந்த பவன் கல்யாண் திடீரென்று துணை முதல்வராக பொறுப்பேற்பது ஏற்புடையது என்றால் அதைவிட கூடுதல் அனுபவமிக்க அரசியல் பக்குவமும் பயிற்சியும் பெற்றவராக விளங்குகின்ற உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதில் தவறு இருக்க முடியாது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டின் அடுத்தடுத்த வளர்ச்சி வேகத்திற்கு ஈடு கொடுக்க உதயநிதியின் பங்கு நிச்சயம் தேவை என்பதும் உறுதி. தற்போதைய நிலையில் தமிழக அமைச்சரவையில் உள்ள இளம் அமைச்சர்களின் உதயநிதி, டிஆர்பி ராஜா, அன்பில்மகேஷ் பொய்யாமொழி இன்னும் சிலரின் பணிகள் மெச்ச த்தக்கதாகவே இருந்து வருகின்றது. அவர்களின் உழைப்பை வேகத்தை தமிழ்நாடு மென்மேலும் பயன்படுத்திக் கொள்ளட்டும். இளைஞர்களுக்கு வழி விடுவோம் என்ற கொள்கையில் துணை முதல்வராக உதயநிதியை அனைவரும் வரவேற்போம், வாழ்த்துவோம் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.