*முட்டம் பாலம் மணல்மேட்டிற்கு இடையே கிடப்பில் போடப்பட்ட 2 கி.மீ இணைப்புச் சாலையை விரைவில் அமைத்திட நிதி ஒதுக்கிட சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை!*
கடலூர் மாவட்டத்தின் கடைகோடி தாலுகாவான காட்டுமன்னார்கோவில் தென் மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களை இணைக்கும் பிரதான பகுதியாக உள்ளது.காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆறு உள்ளதால் பக்கத்து மாவட்டமான மயிலாடுதுறை தஞ்சை, நாகை மாவட்டத்திற்கு 50 கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு வியாபாரம், தொழில் பாதிக்கப்பட்டு வந்தது. நீண்ட கால கோரிக்கைக்குப் பின் கடந்த 2010ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அன்றைய அமைச்சராக இருந்த எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பெரு முயற்சி எடுத்து கொள்ளிடம் ஆற்றில் குறுக்கே முட்டம் பாலம் கட்ட நபார்டு வங்கி உதவியுடன் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முட்டம் - முடிகண்டநல்லூர் இடையேயான பாலத்திற்கு கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி பூமி பூஜை போடப்பட்டு மார்ச் 6ம் தேதி பாலம் கட்டுமானப் பணி துவங்கியது. இரண்டரை ஆண்டுகளில் பணிகள் முடிவடைந்து 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாலம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக 6 மாதங்களுக்கும் மேலாக திறப்பு விழா காணப்படாமல் கிடப்பில் இருந்தது. இருப்பினும் திறப்பு விழா காணாமலேயே தென்மாவட்டங்களில் இருந்து லாரி, வேன், கார் போன்ற வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக இயக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் பொறுப்பேற்ற அன்றைய முதல்வர் ஜெயலலிதா முட்டம் பாலத்தை காணொளி மூலம் திறந்து வைத்தார். ஆனால் இந்த பாலத்திதிற்கு இணைப்புச் சாலை அமைக்கப்படவில்லை. 2014 முதல் இன்று வரை இணைப்புச் சாலை இன்னும் போடப்படவில்லை என பொதுமக்கள் மிகவும் அதிருப்தியுடன் காத்திருப்பில் உள்ளனர். முட்டம்
பாலம் திறக்கப்பட்டும் பஸ்கள் இயக்கப்பட்டும் மயிலாடுதுறையில் இருந்து பாலத்திற்கு மணல்மேடு வழியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு இணைப்புச் சாலை பல ஆண்டுகளாக அமைக்கப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் வடலூர், சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், மணல்மேடு மயிலாடுதுறை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்ல சுலபமான வழியாகும்.அதனால் முட்டம் பாலம் வழியாக ஏகப்பட்ட வாகனங்களும் கனரக வாகனங்களும் வந்து குறுகலான கிராமப்புற சாலையில் செல்வதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவது மேலும் மின் கம்பங்கள் மீது மோதி மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கும் நிலைகளும் அவ்வப்பொழுது ஏற்படுகின்றது. மேலும் முட்டம் பால இணைப்பு சாலை திட்டத்திற்கு தேவையான முழுமையான நில எடுப்பு செய்யப்பட்டு விட்டதாகவும், சுமார் 22 கோடி நிதி அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே முட்டம் பாலத்திற்கு இணைப்புச் சாலையை விரைவில் அமைக்க நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடத்துள்ளார்.