பாம்பு கடித்த நேரத்தில் கூட பதட்டமும், பயமும் இல்லாததால் 107 வது வயதில் கனகாபிஷேகம் கண்டிருக்கிறார் திருப்பூரை சேர்ந்த பாட்டி பேச்சியம்மாள். அவருக்கு வாரிசுகளும், உறவினர்களும் சேர்ந்து கனகாபிஷேகம் நடத்தி கொண்டாடினர்.
ஆயிரம் மூன்றாம் பிறைகளை பார்த்தவர்கள் சதாப்த பூர்த்தி அடைந்தவர்கள் என்று சொல்வார்கள். 1300 மூன்றாம் பிறைகளுக்கு மேல் கண்டவர் திருப்பூர் சின்னக்காளி பாளையத்தை சேர்ந்த பேச்சியம்மாள். அவருக்கு வயது 107. கரைப்புதூர் சின்னக்காளிபாளையத்தில் ஆறுமுக முதலியாரின் மனைவியான இவர் கணவருடன் இணைந்து நெசவுத்தொழில் செய்து வந்து இருக்கிறார்.
இப்போது 107 வயதான நிலையில் மகன் வீட்டில் வசிக்கிறார். ஆனாலும் இன்னும் தன்னுடைய வேலையை தானே செய்து கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியத்துடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். பேச்சியம்மாளுக்கு மொத்தம் 3 மகன்கள், 2 மகள்கள், 8 பேரன்கள், 5 பேத்திகள், 12 கொள்ளுப்பேரன்கள், 6 கொள்ளுப்பேத்திகள் உள்ளனர். இதில் 5 வது தலைமுறையாக 2 வயதான ஒரு எள்ளுப்பேரனும் இருக்கிறார்.
எந்த ஒரு சூழலிலும் நிதானத்தை கடைபிடிக்கும் அவர் கருநாகப் பாம்பு கடித்த போதும் நிதானத்தை இழக்காமல் அமைதியாக இருந்து தனது ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொண்டார். கம்பு, வரகு, திணை, கோதுமை இத்துடன் சிறிது அன்பையும் கலந்து வாழ்வியலோடு இணைத்துக் கொண்டதால் 107 வயதை கடந்தும் மன நிம்மதியோடு வாழ்கிறார். வரும் உறவுகள் அனைவரையும் அன்போடு அரவணைப்பதால் இவரது 107வது பிறந்த நாளைக் காண 600க்கும் மேற்பட்டோர் வந்து ஆத்தாவின் கனகாபிஷேகத்தில் ஆசிகளைப் பெற்றுச் சென்றனர்.
கனகாபிஷேகத்தின் போது அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. மந்திரங்கள் ஒத, அக்னி முழங்கிட சிறப்பான முறையிலே கனகாபிஷேகம் நடைபெற்றது. பூட்டணார் பழனியப்பன் உன்னாத்தாள் தம்பதிகளில் இருந்து உருவான, பாட்டியின் கனகாபிஷேக விழாவில் வாரிசுகள், உறவினர்கள் என 600 க்கும் மேற்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் இதில் தங்களது வாரிசுகளுடன் பங்கேற்று மகிழ்ந்தனர். பரதநாட்டியம், வள்ளி கும்மியாட்டமும் என பாரம்பரிய கலைகளை உறவுகளே ஆடிப் பாட பாட்டி மகிழ்ந்து பார்த்தார்.
தங்கள் குடும்ப ஆலமரத்தின் அடி வேராக இருக்கும் இவருக்கு சிறப்பான ஒரு விழா எடுக்க வேண்டும் என்று உறவுகள் அனைவரும் பேச்சியம்மாள் 107 என்ற whatsapp குழு மூலம் ஒரு வாரத்துக்கு முன்புதான் ஏற்பாடுகளை தொடங்கினர்.
அதிலும் ஹைலைட்டான ஒரு விஷயம் என்னவென்றால் தங்களது தந்தை தாயுடன் பிறந்த உறவுகளைத் தவிர இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட உறவுகள் தெரியாமல் உள்ள இளம் தலைமுறை உறவு பிள்ளைகளுக்கு உறவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இளம் தலைமுறையினரிடம் இன்னார் இவர். இவர்களின் குடும்பத்தார் நமக்கு இத்தனை உதவிகளை செய்திருக்கின்றனர் என அறிமுகப்படுத்தி உறவுகளை வலுப்படுத்தினர். இதன் பங்கேற்ற இளம் தலைமுறையினரும் தன் தாத்தா பாட்டி அத்தை மாமா அனைவரும் ஒற்றுமையாக இருந்தது போல அனைத்து சூழலிலும் நல்லது கெட்டதுகளை முன்னே நின்று பார்த்து ஒற்றுமையாக இருந்து உறவுகளை வழி நடத்தி, அடுத்து வரும் தலைமுறைக்கும் அறிமுகப்படுத்தி பழக்கி செல்வது என உறுதியேற்றுக்கொண்டனர்.
இன்றைய தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் கோபப்படுதல் பேசுதல் என இருக்கும் சூழலில் கருநாகப் பாம்பு கடித்த போதும் கூட துளி கூட அதிர்ச்சி அடைந்து பதட்டமில்லாமல் எதிர்கொண்டாராம். இதன் விளைவாகத் தான் இவர் 100 வயதைக் கடந்தும் வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்று கூறினார் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த கொள்ளுப்பேத்தி கலைவாணி
தனது தாய் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டக்கூடியவர் என்று கூறினார். மகன் பாலு. இதேபோல் அவர்களது உறவினர்கள் அனைவரும் பாட்டியை பற்றி நெகிழ்ச்சியாக நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 107 வயதான கூல் பாட்டிக்கு திருவிழா எடுத்து கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள் வாரிசுகள்.