பகைகள் வளரும்.. தலைகள் உருளும்... இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு நான்காவது கொலையை அரங்கேற்றிய அக்னி பிரதர்ஸ்!!

அக்னி ராஜ் கொலைக்கு பலிக்கு பலியாக அக்னி பிரதர்ஸ் இன் நான்காவது கொலை பல்லடத்தில் நடந்திருக்கிறது. இளைஞரை ஓட ஓட விரட்டி தலையை சிதைத்து கொலை செய்த நிலையில், இந்த சம்பவம் நடைபெறும் என ஏற்கனவே இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதுடன், அதை நடத்தியும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூர் என்ற இடத்தில் இன்று காலை எட்டு மணி அளவில் இளைஞர் ஒருவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் வந்த ஐந்து நபர்கள் அவரை மறித்தனர். 

திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலையில் அவரை ஓட ஓட வெட்டினார்கள். சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய போது, ஐந்து நபர்களும் அந்த இளைஞரை படுபயங்கர ஆயுதங்களுடன் நடுரோட்டில் துரத்திச் சென்று ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். 

இதில் தலை மற்றும் கழுத்துப் மற்றும் கைப்பகுதிகளில் அதிக வெட்டு காயங்கள் விழுந்துள்ளது. முகம் கொடூரமாக வெட்டிச் சிதைக்கப்பட்டது. 
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை ஆகியோர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 
கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணன்
-------------------------------------------

இதுகுறித்த போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அக்னிராஜ். சட்டக்கல்லூரி மாணவரான அக்னிராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

 ஜாமினில் வெளியே வந்த இவரை மார்ச் 5ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர். 
இதற்கு பழிவாங்க வேண்டும் என அக்னிராஜின் நண்பர்கள் அக்னி பிரதர்ஸ் என்று ஒரு குழுவை துவக்கி அக்னிராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஷ், அழகு பாண்டி என்ற மூவரை அடுத்தடுத்து தலையை சிதைத்து வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில் தான்  பல்லடம் அருகே உள்ள பேக்கரியில் வினோத் கண்ணன் மற்றும் பொன்னையா ஆகிய இருவரும் பணியாற்றி வருவதை அறிந்த அக்னி பிரதர்ஸ் குழுவினர் அவர்களை கண்காணித்து வந்துள்ளனர். இன்று இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டு சென்றுள்ளனர். அப்போது பொன்னையா தப்பிச் சென்றுள்ளார். 

அங்கு இருந்த வினோத் கண்ணன் தப்பிக்க முயன்று ஓடி உள்ளார். அவரை  காரில் துரத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் கரையாம்புதூர் பகுதியில் வெட்டி தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளது.
 இவர் மைனர் மணி கொலை செய்யப்பட்ட போது உடன் வெட்டு காயம் அடைந்தவர். அக்னி ராஜ் கொலை வழக்கில் இவர் சேர்க்கப்படவில்லை என்ற நிலையிலும், அக்னி ராஜ் கொலைக்கு இவரும் காரணம் என கருதிய அக்னி பிரதர்ஸ் குழுவினர் இவரை கொலை செய்துள்ளனர். 

பழிக்குப்பழியாக நான்கு முடிந்துவிட்டது என அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் அக்னி ராஜ் கொலை வழக்கில் பூச்சி இருளப்பன், விக்கி, சக்திவேல், தர்மராஜ் என்ற நான்கு பேரும் கைதாகி ஜாமினில் வெளியே வந்து  தலைமறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இப்படி நான்கு கொலைகளை அரங்கேற்றி உள்ள இந்த குழு அவற்றை சினிமா பாணியில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதும், இந்த இரு குழுவினருக்கிடையேயான பகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இவர்களின் அக்னி என்கிற சமூக வலைத்தள பக்கங்களில் கொடூர ஆயுதங்களுடன் வலம் வருவதையும் பதிவிட்டதுடன், ’பகைகள் வளரும், தலைகள் சிதறும்’ என்ற வாசகங்களை அக்னிராஜ் படத்துடன் ஏற்கனவே பதிவிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post