திருப்பூர் தடகளத் திருவிழா; வாகை சூடிய வீரர்கள்

திருப்பூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி அவிநாசி அருகிலுள்ள பழங்கரை டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் வழிகாட்டுதலுடன், திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 6வது ஆண்டு மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை, அவிநாசி அருகிலுள்ள, பழங்கரை டீ பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 14,16,18 மற்றும் 20 வயதிற்குட்பட்டோர்கள் என நான்கு பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே 87 வகையான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது. முற்றிலும் மின்னணு தொழில்நுட்ப கருவிகள் மூலம் தூரம் மற்றும் நேரம் கணக்கிடப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்புரை கூறினார். டீ பப்ளிக் பள்ளி குழுமத்தின் சேர்மன் ஈஸ்ட்மேன் சந்திரன் தலைமை வகித்தார். தடகள சங்க மூத்த துணைத் தலைவர் மோகன் கார்த்திக், செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தேசியக்கொடி ஏற்றினார். திருப்பூர் மாநகர மேயர் தினேஷ்குமார் ஒலிம்பிக் கொடி ஏற்றினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் பப்பீஸ் சக்திவேல் மாவட்ட தடகள சங்கக் கொடியை ஏற்றினார். சென்னை சில்க்ஸ் குழுமத்தின் இயக்குநர் நந்தகோபால், திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம், கதிரவன் பள்ளியின் சேர்மன் நாராயணமூர்த்தி, தொழிலதிபர்கள் செந்தில், நித்தின், ஸ்ரீஅம்மன் ஜுவல்லர்ஸ் இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தடகள சங்கத்தின் துணைத்தலைவர்கள் அபிராமி வெங்கடேசன், ஜெயப்பிரகாஷ், டெக்னோ ஸ்போர்ட்ஸ் சந்தீப்குமார், இணைச் செயலாளர்கள் நிரஞ்சன், அழகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொழில்நுட்பக் கமிட்டி சேர்மன் மனோகர் செந்தூர்பாண்டி, புரவலர் இளங்கோவன், உறுப்பினர் சிவசக்தி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். போட்டிகளுக்கு நடுவர்களாக செளந்திரராஜன், கருப்பையா, ஆனந்தன் தலைமையில் சுமார் 50 பேர் பணியாற்றினர். போட்டியின் வீரர்களுக்கு முதலுதவி அளிக்கும் விதமாக ஸ்ரீசரண் மருத்துவமனை மற்றும் மித்ரா மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர்கள் பணியாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக தடகள சங்கத்தின் இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களுடன் டெக்னோ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் டி-சர்ட் பரிசாக வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள், வரும் செப்டம்பர் மாதம் 19 முதல் 22 வரை ஈரோடு மாவட்டம், எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் நடைபெறும் 38 வது தமிழ்நாடு மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கலந்துகொள்ள உள்ளனர்.

போட்டி முடிவுகள் :

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த தடகள வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசு வழங்கப்பட்டது. அதன்படி 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் இளமுகிலன் (கேலோ இந்தியா மையம்-2258 புள்ளிகள்), மாணவி சாருஹாசினி (ஜெய்வாபாய் கிளப்-2353 புள்ளிகள்), 16 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் சுகைல் ரஹீம் (ஸ்ரீனிவாசா வித்யாலயா-592 புள்ளிகள்), மாணவி வர்ஷிதா (ஜெய்வாபாய் கிளப்-800 புள்ளிகள்), 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் மணிகண்டன் (ஐ வின் ட்ராக் கிளப்-850 புள்ளிகள்), மாணவி கெவினா சஜீவ் (ஐ வின் ட்ராக் கிளப்-770 புள்ளிகள்), 20 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் மனோஜ் குமார் (பார்ன் டு ரன் கிளப்-971 புள்ளிகள்), மாணவி ஸ்ரீவர்த்தனி (ஐ வின் ட்ராக் கிளப்-898 புள்ளிகள்) ஆகியோர் தேர்வு பெற்றனர்.

ஒட்டு மொத்த புள்ளிகளின் படி ஆர்.எஸ்.ஜி கிளப் 264 புள்ளிகளுடன் முதலிடமும், ஆன் யுவர் மார்க் கிளப் 151 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் 121 புள்ளிகளுடன் மூன்றாமிடமும், பார்ன் டு ரன் கிளப் 80 புள்ளிகளுடன் நான்காமிடமும், ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா கிளப் 73 புள்ளிகளுடன் ஐந்தாமிடமும் பெற்றன. அனைவருக்கும் சேம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்பட்டது.
Previous Post Next Post