ஏனாம் தொகுதியில் சுகாதார சீர்கேட்டால் விஷ காய்ச்சல் பரவி குழந்தைகள் பாதிப்பு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆர்.எல்.வி பேரவை மாநில பொது செயலாளர் ஏனாம் அரதாதி போசியா வலியுறுத்தல்
ஏனாம் தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர் வாரப்படாமல் , சுத்தம் செய்யப்படாமல் அங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் ஊர் முழுக்க கொசுத்தொல்லை அதிகமாகி காலரா டைபாய்டு போன்ற விஷ காய்ச்சல் பரவி வருகிறது. இதில் அதிகமாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவ மனைகளில் போதிய டாக்டர் வசதி இல்லாமல் , விஷ ஜூரத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக நிரம்பி வழிகின்றனர். ஏனாமில் சரியான மருத்துவ வசதி இல்லாததால் , ஏனாமில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நோயாளிகள் அலைக்கழிக்க படுகின்றனர். இது புதுச்சேரிக்கு அவமானம் இல்லையா, கால்வாய் அடைப்புகளினால் எதிர்வரும் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழியில்லாமல் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குப்பைக்கு வரி வாங்குகிறார்கள் ஆனால் குப்பைகள் சரியாக அள்ளுவது இல்லை .புதுவை அரசு குப்பை அள்ள தனியாரிடம் ஒப்படைத்த போது 150 பேர் இருந்தனர். தற்போது வெறும் 50 பேர் மட்டுமே குப்பை அள்ளுகின்றனர். ஆள் பற்றாக்குறையை அரசு போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குப்பை ஊர் முழுக்க தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விஷ காய்ச்சல் பரவியுள்ளது. இதனை தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தொழிலாளர் துறையில் கடந்த மூன்று மாதங்களாக ஆய்வாளர் பதவி காலியாக இருக்கின்றது. பதவியில் இருந்த தயாளன் என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதுவைக்கு மாற்றலாகி வந்ததிலிருந்து தொழிலாளர் துறைக்கு இன்னும் ஆய்வாளர் நியமிக்க படவில்லை. இதனால் தொழிலாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே அரசு தொழிலாளர் துறைக்கு ஆய்வாளர் உடனடியாக நியமிக்க வேண்டும். புதுவை அரசு ஏனாம் மக்களை மாற்றாந்தாய் எண்ணத்தோடு பார்க்காமல் விஷ ஜூரத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற , சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்