தூத்துக்குடி : ஏற்றுமதி நிறுவன மேலாளரிடம் கண்டெய்னர்கள் புக்கிங் செய்து பல லட்சம் பண மோசடி - கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் கைது!


 தூத்துக்குடி : ஏற்றுமதி நிறுவன மேலாளரிடம் கண்டெய்னர்கள் புக்கிங் செய்து பல லட்சம்  பண மோசடி - கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் கைது!

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (49) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

மேற்படி ஏற்றுமதி  நிறுவனம் உணவு பொருட்களை கண்டெய்னர்கள் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துவரும் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து மேற்படி மணிகண்டனிடம் கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சர்தார் என்பவரது மகன்கள் ரகில் (26),  ரபிக் சர்தார் (38) மற்றும் சர்தாரின் மனைவி பாசுரோஸ்னாரா (55) ஆகியோர் தாங்கள் நடத்தி வரும் ஆர்.ஆர்.பி ஷிப்பிங் லைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு கண்டெய்னர்களை புக்கிங் செய்தால் மார்க்கெட் ரேட்டை விட கம்மியாக மார்ஜின் செய்து தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியதன் பேரில் மேற்படி மணிகண்டன் ரஷ்யாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்வதற்கு 16 கண்டெய்னர்களை  புக்கிங் செய்து, அதற்குரிய ரூபாய் 38,49,000 பணத்தை வங்கிக் கணக்கின் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் மேற்படி நபர்கள் 16 கண்டெய்னர்களில், 6 கண்டெய்னர்களுக்கு மட்டுமே மேற்படி மணிகண்டன் நம்புவதற்காக டெலிவரி செய்த ரசீதை அனுப்பி விட்டு மீதம் உள்ள 10 கண்டெய்னருக்கு மணிகண்டனிடம் வாங்கிய பணத்தை சரியான முறையில் டெலிவரி ஏஜென்டிடம் கட்டாமல் இருந்துள்ளனர்.

இதனால் 10 கண்டெய்னர்கள் டெலிவரி ஆகாமல் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் துறைமுகத்தில் இருப்பதற்கு அபராதம் விதிக்கப்பட்டதால் ரூபாய் 75,00,000/- பணம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மணிகண்டன் அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து மணிகண்டன்  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு மேற்பார்வையில், ஆய்வாளர்  அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், தலைமை காவலர்கள் வேல்ராஜ் மற்றும் கோபால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, ரபீக் சர்தார் என்பவரை கோயம்புத்தூரில் வைத்து கைது செய்து,  தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Previous Post Next Post