*ஆடிப்பெருக்கை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியை தூய்மைப்படுத்தி தண்ணீர் திறந்து விட சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கோரிக்கை!*
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகின்றோம். இந்நாளில் தொடங்கும் செயல் எதுவும் பல்கிப் பெருகும் என்பதால் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர். ஆடிப்பெருக்கு நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர் மரபில் நீடித்திருக்கும் வழக்கம். இதன் அடிப்படையில் விவசாயத்துக்கு ஆதாரமான ஆறு, குளம், நீர்நிலைகள் போன்றவற்றைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாள் ஆடிப்பெருக்காகும். ஆடிப் பெருக்கு என்றதும் எல்லோருக்கும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நினைவுக்கு வரும். ஆனால் இவ்வாண்டு காவிரியில் தண்ணீர் இல்லாததால் காவேரி வறண்டு கிடக்கிறது. காவிரிக்கரையில் உள்ளவர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் வழிபட முடியாத சூழல் இருந்த பொழுதிலும் தற்பொழுது கேரளா மற்றும் கர்நாடகத்தில் அதிக மழை பெய்வதால் ஓரளவிற்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அனைவராலும் கொண்டாடப்படவேண்டிய அற்புதமான திருநாளான ஆடிப் பெருக்கு வரும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி சனிக்கிழமை ஆடி பதினெட்டாம் நாள் நடைபெறுவதால் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் ஆயிரக்கணக்கான மக்கள், பெண்கள் குடும்பத்தினருடன் வந்து வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக துலாக்கட்ட காவேரி கரையை தூய்மைப்படுத்திடவும், தொடர்ந்து காவிரியில் தண்ணீர் கொண்டு வரவோ அல்லது துலாக்கட்ட காவிரிப் பகுதியில் உள்ள போர்வெல் வாயிலாக புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்பி விழா சிறப்பாக நடைபெற தகுந்த முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.