தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை - கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி


 தூத்துக்குடியில் வின்பாஸ்ட்  மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை - கட்டுமான பணிகளுக்கு  தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி 

முதல் கட்டமாக 1119.67  கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. 

தமிழ்நாட்டின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் எலக்ட்ரிக் கார் (Electric Vehicle - EV) தொழிற்சாலையின் களப்பணிகள் கடந்த மாதம் துவங்கப்பட்டது. வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்த ஆலையை நிறுவும் பணிகள் மந்தமாகத் துவங்கினாலும், தற்போது வேகமெடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசுடன் கடந்த ஆண்டு வின்ஃபாஸ்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தற்போது ஆலைக்கான கட்டுமான பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலை சுமார் 380 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 1,50,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 3,000 முதல் 3,500 வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஹப் ஆக மாறுவதற்கான முயற்சிகளில் இது ஒரு முக்கிய படியாகும்.

உலகளவில் மிகவும் போட்டி மிகுந்த எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் கால் பதிப்பதற்கான போராட்டத்தில் இருக்கும் நிலையில் கூட, வின்ஃபாஸ்ட் தனது விரிவாக்கத் திட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து எதிர்கால இலக்கை அடைய தனது முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில், 114 ஏக்கரில் அமையும் வின்பாஸ்ட் மின்சார வாகன தொழிற்சாலை , கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி இரு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இன்று கட்டுமான பணிகளுக்கு  தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

இதன்படி, முதல் கட்டமாக ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைய உள்ளது. 1119.67 கோடி செலவில் அமைய உள்ள தொழிற்சாலை கட்டுமான பணிகள் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததையடுத்து உடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வின்பாஸ்ட் தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post