அனைத்து துறைகளிலும் தோல்வியுற்று மக்களாட்சி தகுதியை இழந்த ரங்கசாமி தலைமையிலான அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ செய்யவேண்டும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கோரிக்கை.
புதுவையில் ரங்கசாமி தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரட்டை என்ஜின் ஆட்சி, இரண்டு தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இது மக்களாட்சி தகுதியை ரங்கசாமி தலைமையிலான அரசு இழந்துள்ளதையே காட்டுகிறது.
முதல்வர் ரங்கசாமி தலைமையில் பஞ்சபாண்டவர்களை போல் இருக்கின்ற அமைச்சர்கள் மக்களை பஞ்சத்தில் வீழ்த்தி இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். மின் கட்டண உயர்வு, தவறான புதிய கல்விக்கொள்கை, போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத கஞ்சா விற்பனை, பொதுப்பணி துறையை ஜப்தி செய்ய கூடிய நிலை, உழவர்கரை தொகுதியில் விஷ வாயு தாக்கி மூன்று பெண்கள் பலியான விவகாரம் ,காரைக்கால் விவசாயிகள் பிரச்சினை , சந்தனமரம் கடத்தல் விவகாரம் ,
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சந்திர பிரியங்காவிற்கு பிறகு தனி அமைச்சர் நியமிக்காததும், இலாக்காவே இல்லாமல் பதவி சுகம் அனுபவித்து வரும் ஒரு அமைச்சரை புதுவையை தவிர வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது .
ரேஷன் கடையை திறப்போம் என்று வாக்குறுதி அளித்து விட்டு , ரேஷன் கடையே இல்லாத துறைக்கு ஒரு அமைச்சரை நியமித்து மக்களை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம். காமராஜர் ஆட்சியை நடத்துவோம் என்று கூறிவிட்டு, கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்கள் எங்கு பார்த்தாலும் திறந்தும் மதுபான தொழிற்சாலைகள் திறநதும் ஆன்மீக புதுவையை மதுபான புதுவையாக மாற்றியுள்ளது முதல்வர் ரங்கசாமியையே சேரும்.
இரட்டை என்ஜின் ஆட்சியில் அதிருப்தி MLA க்கள் உள்ள ஒரு என்ஜின் தற்போது வடக்கு புறமும், மற்றொரு என்ஜின் வேறு புறமும் செல்வதற்கு முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார். முதல்வரும் அமைச்சர்களும் ஏஜன்டுகள் மூலம் லஞ்சப்பணம் பரிவர்த்தனைகள் செய்கின்றனர் என்றும் , ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கின்ற MLA பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். இதிலிருந்து முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆன அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து , மக்களாட்சி தகுதியை இழந்துவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆகவே புதுவை மக்கள் நலன் கருதி ஜனாதிபதி அவர்கள் உடனடியாக தலையிட்டு மக்களாட்சி தகுதியை இழந்த, மக்கள் விரோத புதுவை அரசை இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 356 படி டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்