மயிலாடுதுறை புதுத்தெரு நல்லத்துகுடி தார் சாலை மண் சாலையானதால் மக்களுக்கு பெரும் அவதி! விரைந்து சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஐந்தாம் நம்பர் புதுத்தெரு சாலை பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையை கடந்து தான் மயிலாடுதுறை நகரத்திற்கு நல்லத்துகுடி, கோடங்குடி, செருதியூர், கடக்கம், எலுமிச்சம்பாத்தி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், வேலைக்கு செல்வோரும், விவசாய பெருங்குடி மக்களும் சென்று வர வேண்டும். கடந்த பல மாதங்களாகவே இச்சாலை தார்சாலையா மண்சாலையா என்று கண்டறிய முடியாத அளவிற்கு முழுமையாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இச்சாலைக்கு அருகில் தான் திருமண மண்டபங்கள் அமைந்துள்ளன. விசேஷ நாட்களில் பெருமளவு மக்கள் இப்பகுதிக்கு வந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கின்றார்கள். அந்நேரங்களில் இச்சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. மேலும் முக்கியமான வங்கித்துறை தலைமை அலுவலகம், புது சுகாதாரத் துறை மாவட்ட அலுவலகம் இங்கே தான் அமைந்துள்ளது. மேலும் அடுத்தடுத்து மழைக்காலங்கள் வருகின்ற காரணத்தினால் விரைந்து இச்சாலை சீரமைக்கப்பட வேண்டும். அரசின் ஒப்பந்தம் சார்பாக நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் மிகவும் அதிக லோடுகளுடன் செல்வதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். மக்களால் மிகவும் தவிர்க்க முடியாத சாலையாக, பயன்பாட்டிற்கு உரிய சாலையாக இருக்கின்ற காரணத்தினால் உடனடியாக இச்சாலையை மேம்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.