கோவையில் 450 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் கைது
கோவை;-ஜூலை- 09 கோவை மாவட்டம் சூலூரில் கர்நாடகாவில் இருந்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் காருடன் கைது செய்துள்ளனர்.கோவை மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிரமாக சோதனை செய்து புகையிலைப் பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையுடன் விற்பனை செய்யும் நபர்களையும் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று காலை சூலூர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட சொகுசு காரை நிறுத்த சைகை காண்பித்தனர்.இருந்தும் கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.அந்த காரை துரத்திச் சென்று அவினாசி சாலையில் மடக்கிப் பிடித்த போலீசார் காரில் இருந்து நபரை பிடித்து விசாரணை நடத்தி காரை சோதனையிட்டனர். அப்போது காரில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதன் பெயரில் காருடன் வந்த நபரை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பகத்சிங் வயது 42 என்பதும் இவர் மயிலம்பட்டி பகுதியில் இடம் வாங்கி பிரமாண்டமான வீடு கட்டி வசித்து வருவதும் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து கோவையில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது .அதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த சொகுசு கார் மற்றும் 450 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் .