முடிவுக்கு வருகிறது மக்களவைத் தேர்தல் நடைமுறைகள்: நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு.!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவுடன் (வியாழக்கிழமை) விலக்கிக் கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் 18-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியானது. அன்றிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தொடர்ந்து கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தப்பட்டு வந்தது.
இதையடுத்து, கடந்த ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.