*#கள்ளச்சாராயத்தை #முற்றிலும்ஒழிப்போம்!* *#மதுவிலக்கை#அமல்படுத்துவோம்! #சமூகஆர்வலர் #அ.#அப்பர்சுந்தரம்
கள்ள சாராயம் குடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் 50ஐ தாண்டும் நிலையில், கடந்த ஆண்டு மரக்காணத்தில் 15 பேர் மரணம் அடைந்ததையும் யாரும் மறக்க முடியாது. அரசு மதுபான கடையான டாஸ்மாக்கில் விலை அதிகமாக இருப்பதால்தான் கள்ளச்சாராயத்தை பலர் குடிக்கின்றார்கள் என்னும் வேதனைக்குரிய செய்தி இப்படிப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சாவுகளின் பொழுது வெளிப்படுகின்றது. இதனை அனைவரும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக் குரலில் ஓங்கி எழுப்பினாலும் போராடினாலும் தடுத்து நிறுத்த முடியாமல் போவதற்கான உள்ள காரணத்தை ஆழமாக ஆராய வேண்டிய தருணத்தில் நாம் தற்போது இருக்கின்றோம். இவ்விஷயத்தில் அரசு, பொதுமக்கள், காவல்துறை இணைந்து சரியான முடிவு எடுக்க வேண்டும். மதுவிலக்கு முழுமையாக அமுல்படுத்த முழுமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சாமானிய மனிதனின் உழைப்பும் உடலும் மது குடிப்பதால் வீணாவதை மீண்டும் மீண்டும் எழுத்து வடிவில் கொடுக்காமல், அனைவரும் ஒருங்கிணைந்த செயல்வடிவம் கொடுக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பம் நிர்கதியாகி இனி படப்போகும் கஷ்டங்கள் துயரங்கள் சொல்லிமாளாது. சிலபல லட்சங்களால் அதனை ஈடு செய்யவும் முடியாது. இப்படிப்பட்ட மனித குல அழிப்புக்கு வித்திடும் சாராய விற்பனையால் கிடைக்கும் வருவாயை கொண்டு, மக்களுக்கு நல்ல செயல்கள் செய்வோம் என்று சொல்வதே அபத்தமானது.தவறும் கூட. ஆகவே விரைந்து உரிய நல்லதொரு மதுவிலக்கு கொள்கை முடிவை அறிவிக்க முன்வரவேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள, மதுவால் மாண்ட குடும்பத் தாய்மார்களும், இவற்றையெல்லாம் தினமும் பார்த்து கலங்கிப் போய் வேதனையோடு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்ற தாய்மார்களும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சனம் என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்