*சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!* காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்னும் பழமொழிக்கு ஏற்ப தற்போதைய அதீத சூரிய ஒளியை பயன்படுத்தி மின் உற்பத்தியை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டு கோடை காலத்திலும் அதிகரித்து கொண்டே வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு பல வழிகளில் மின் உற்பத்தியை பெருக்க வேண்டியது மிக அவசியமாகும். அந்த வகையில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு 2024ல் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வெப்ப அலை வீசுவதுடன் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து நீடித்துள்ளதால், இப்படிப்பட்ட நிலை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்ற வானிலை ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிப்பதால் உடனடியாக சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும். குறிப்பாக அரசின் சார்பில் சில வட மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது போல மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி பேனல்களை அமைத்து அதிலிருந்து மின்சாரத்தை பெறுகின்ற பெரும் திட்டத்தை உருவாக்கிட வேண்டும். வெட்டவெளி, நீர் நிலைகள், ஆறுகள், ஏரிகளின் கரையோரங்கள் உள்ளிட்ட இடங்களை தேர்ந்தெடுத்து போர்க்கால அடிப்படையில் சோலார் பேனல்களை அமைத்து விரைந்து மின் உற்பத்தியை துவங்க வேண்டும். ஏற்கனவே சோலார் மின் உற்பத்திக்காக சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் விரைவுப்படுத்துவதுடன், மானியங்கள் வழங்கி தொழிற்கூடங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் சோலார் பேனல்கள் அமைப்பதற்கு உதவிட வேண்டும். அவ்வாறு செய்கின்ற பொழுது விவசாயத்திற்கும் 16மணி நேரத்திற்கு மேலாக மும்முனை இலவச மின்சாரம் வழங்கவும், வீடுகளுக்கும் தங்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கவும் இயலும் என்பதை உணர்ந்து உடனடியாக அதற்கான செயல் திட்டத்தின் படி நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் என்று சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.