*மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது! உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*
மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதி மிகவும் புனிதமானது. காசிக்கு நிகரானது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் புனிதமான கங்கை இங்கே வாசம் செய்வதாக ஐதீகம். கங்கையின் பாவத்தை போக்கிய காரணத்தால் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் புனித நீராடும் நிகழ்வு துலா கட்டத்தில் நடைபெறுவது வழக்கம். இங்கு 2017 ஆம் ஆண்டு காவேரி மகா புஷ்கரம் விழா விழா சிறப்பாக நடைபெற்றது.12 நாட்கள் நடைபெற்ற விழாவில் சுமார் 25 லட்சம் பக்தர்கள், சங்கராச்சாரியார்கள், ஆதீன மடாதிபதிகள், துறவியர்கள் மற்றும் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள். இப்படிப்பட்ட பெருமைமிக்க துலாக் கட்ட பகுதியை முழுமையாக பராமரிக்க வேண்டும், எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென்று தற்பொழுது துலா கட்டத்தின் தெற்குப்புற கிழக்குப் பகுதியில் மழையினால் அரிப்பு ஏற்பட்டு 20 அடி நீளம் 10 அடி அகலம் ஆழம் அளவிற்கு சரிந்து விழுந்து விட்டது. மேலும் தடுப்புச் சுவரின் மற்ற பகுதிகளில் தொடர் விரிசல்கள் காணப்படுகிறது. துலா கட்ட மண்டபத்தையும் தெற்கு பகுதி சாலைகளையும் இணைக்கும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிக அளவில் கடக்கும் பகுதியாகவும் உள்ளது. மேலும் மிகவும் குறுகிய பகுதியாக இருப்பதினால் அடுத்தடுத்த நாட்களில் அதீத மழை இருக்கும் என்ற எச்சரிக்கை அடுத்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரிந்து விழுந்த கான்கிரீட் சுவர் கட்டையை சீரமைத்து விபத்தும் உயிரிழப்பும் ஏற்படாமல் தடுப்பதுடன் மேலும் தொடர் சரிவு ஏற்படாமலும் காத்திட வேண்டும். மேலும் இப்பகுதி முழுவதும் உள்ள சாலைகள், பாலம், கைப்பிடி சுவர்,மண்டபம், தெரு விளக்குகள் ஆகியவற்றையும் தொடர் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் காவிரி ஆற்றுக்குள் தூய்மையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.