இமயமலையில் இருக்கும் ஜோதிர்லிங்க கோவிலான கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட்ட திறக்கப்பட்டது. முதல்நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டனர்.
இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12 ஆயிரத்து 800 அடி உயரத்தில் கேதர்நாத் கோவில் உள்ளது. இந்த கோவில், சார்தாம் என அழைக்கப்படுகின்ற நான்கு புண்ணிய தலங்களில் முக்கியமான கோவில் ஆகும். மேலும் கேதர்நாத் கோவில் ஜோதிர்லிங்க கோவிலாகவும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் முழுமையாக பனி மூடிவிடும் என்பதால் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் மட்டுமே கேதர்நாத் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்க்ள்.
இந்த ஆண்டு அட்சய திருதியை நாளான இன்று கோவில் நடை திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி இந்த விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். மேலும் கேதர்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்களும் திரண்டு இருந்தார்கள். கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஹெலிகாப்டரில் கோவில் மீது மலர்கள் தூவப்பட்டது. எல்லைப்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேதர்நாத் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை தொடங்கி விட்டதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.