மக்களை வாட்டி வதைக்கிற அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம்... ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 


அதிமுகவை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர்., அவர்கள். அதை கட்டிக்காததவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஏழைகளுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கக்கூடிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். எந்த இடத்தில் மக்களை சந்தித்தாலும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்ற குரல் தான் ஒலித்துக் கொண்டு இருக்கிறது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தான் மக்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். 10 ஆண்டு காலத்தில் எண்ணற்ற திட்டங்களை அதிமுக வழங்கி இருக்கிறது. 

இன்றைக்கு ஸ்டாலின் பேசுகிறார். குடும்ப கட்சி அதிமுக என்றார். நாங்கள் நிர்வாகிகள் குடும்பமாகத்தான் இருந்து கொண்டு இருக்கிறோம். திமுகவில் வாரிசை வளர்க்கிறார்கள். அது ஒரு கட்சி அல்ல. கார்ப்பரேட் கம்பெனி. தனது வாரிசுகளை கொண்டு வர வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் எண்ணம். வாரிசு அரசியலுக்கு சாவுமணி அடிக்கிற தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும்.

இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் கூட ஆட்சிக்கு வரலாம். அது அதிமுகவில் மட்டும் தான் நடக்கும். சாதாரண தொண்டன் கூட உட்சபட்ச பதவிக்கு வர முடியும். வேறு எந்த கட்சியிலும் ஆக முடியாது. இது உழைக்கும் எவர் வேண்டுமானாலும் உயர் பதவிக்கு வரக்கூடிய கட்சி அதிமுக ஒன்று தான்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகிரார், ‘அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி இருண்ட ஆட்சி என்று சொல்கிறார். அதிமுக 10 ஆண்டு காலம் என்ன கொண்டு வந்தோம் என்று மேடையில் பேச நாங்கள் தயார். மூன்று ஆண்டு காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நீங்கள் பேசுங்கள். இதை பல மேடைகளில் சொன்னேன். ஆனால் பதில் எதுவும் இல்லை.

இது அதிமுக பொதுக்கூட்டமாக இல்லை. மாநாடு போல இருக்கிறது. நம்முடைய வெற்றி வேட்பாளரை வெற்றி பெறச்செய்வோம் என்பதை உங்கள் முகங்களீல் காண முடிகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. இந்த ஈரோடு மாவட்டத்திலும், திருப்பூர் மாவட்டத்திலும் முதியோர்களை குறிவைத்து கொலை செய்து கொள்ளையடிக்கிறார்கள். சென்னிமலை பகுதியில் மட்டும் இதுபோல மூன்று சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

பொம்மை முதலமைச்சர் ஆளுவதால் இதையெல்லாம் சரி செய்ய முடியவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஏராளமான தொழில் நிறுவனஙள் தமிழ்நாட்டுக்கு வந்தது. 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து பல லட்சம் பேருக்கு வேலை கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். 

அண்மையில் ஸ்டாலின் ஸ்பெயினுக்கு போனார். தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக செய்து தந்தார். ஆனால் தமிழ்நாட்டு தொழிலதிபர்க்ளை ஸ்பெயின் அழைத்து ஒப்பந்தம் போடுகிறார்கள். ஏற்கனவே திமுக அமைச்சரவையில் இருந்த பழனிவேல் தியாகராஜம் ஆடியோவில் ஒரு கருத்து சொன்னார். ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து  என்ன செய்தார்கள் என்று வெளியிட்டார். அந்தப்பணத்தை முதலீடு செய்யத்தான் அங்கு போனார்களா? 

இதை நாம் சொல்லவில்லை. திமுக அமைச்சரவையில் இருப்பவரே சொல்கிறார். மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. கொள்ளையடிக்க ஆட்சி செய்து இருக்கிறார் என்று அவர்கள் அமைச்சரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். 

அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது பொய் வழக்கை திமுக பதிவு செய்கிறது. சக்கரம் சுழலும். அதிமுக ஆட்சிக்கு வரும். இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா அவர்கள் காலங்களிலும் இப்படித்தான் செய்தார்கள். இதற்கெல்லாம் அஞ்சவில்லை. 

என்மீது வழ்ககுப்போட்டார்கள். எடப்பாடி பழனிசாமி 4500 கோடி ஊழல் என்று போட்டார்கள். நான் அப்போதே சொன்னேன். நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து நிரபராதியாக நின்று கொண்டு இருக்கிறேன். ஸ்டாலின் அவர்களே எனக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை

அதிமுக, அம்மா மறைவுக்கு பிறகு மக்கள் ஆதரவுடன் 4 ஆண்டுகள் ஆட்சி செய்தேன். நான் நினைத்து இருந்தால் வழக்கு போட முடியாதா? எவ்வளவு ஊழல் செய்தீர்கள் உங்கள் ஆட்சியில்? ஆனால் நாங்கள் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று அதைச்செய்தோம். 

ஆனால் நீங்கள் அதிமுகவை ஒடுக்க பல வழக்குகளை போட்டீர்கள். எல்லாவற்றையும் உடைத்து தான் இங்கு வந்திருக்கிறோம். மக்களும், கட்சி தொண்டர்களின் ஆதரவால் நான் இங்கு வந்திருக்கிறேன். எனக்கு விழுகின்ற மாலை கட்சி தொண்டனுக்கு விழுகின்ற மாலை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கின்ற ஒரே ஜீவன் அதிமுக தொண்டர்கள்.

அம்மா இருக்கும்போது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தார்கள். அவர் மறைவுக்கு பின்னர் இன்று 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். இளைஞ்சர்கள், மகளிர் நிறைந்த கட்சி அதிமுக. ஒரு தொண்டனைக் கூட உங்களால் தொட்டுப்பார்க்க முடியாது.

இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார் என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டையே உங்களால் காக்க முடியவில்லை. தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டீட்கள். இந்த நிலையில் உங்களுக்கு டெல்லிக்கு போக வேண்டுமா? மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த தேர்தலோடு திமுகவுக்கு முடிவு கட்டுகிற தேர்தலாக இந்த தேர்தல் அமையும். மக்களிடத்தில் இந்த ஆட்சி மீது கொந்தளிப்பு, வெறுப்பு இருக்கிறது. இதை மறைக்கத்தான் இந்தியா கூட்டணி பெயரில் போட்டியிடுகிறார்கள். 

இந்தக்கூட்டணி எப்படிப்பட்ட கூட்டணி? பஞ்சாபில் காங்கிரசும் ஆம் ஆத்மியும் எதிரணியில் இருக்கிறார்கள். ஆனால் டெல்லியில் கூட்டணி என்கிறார்கள் இதே போல கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரசும் எதிரில் நிற்கிறார்கள். ஒருமித்த கருத்து இல்லாதவர்கள் எப்படி வெல்ல முடியும்.

உங்கள் கூட்டணிக்கு யார் பிரதமர்? உங்கள் கூட்டணியிலேயே ஒவ்வொருத்தரையும் எதிர்த்து போட்டியிடுகிறீர்கள். ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. மம்தா பானர்ஜி முன்னிறுத்தவில்லை. நவீன் பட் நாயக் முன்னிறுத்தவில்லை. இப்படி நிறுத்தாமல் கட்சிகள் வெற்றியை குவித்து இருக்கிறார்கள். 

மாநில நலனை முன்னிறுத்தியே கட்சிகள் வெற்றி பெறுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் நம் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்கிறார்கள். அவர்களூக்கு நல்லது செய்வது தான் அதிமுகவின் லட்சியம். பிரதமர் பதவி ஆசை கிடையாது. 

வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பேசுவது உங்கள் வழக்கம். நீங்கள் எவ்வளவு கொச்சைப்படுத்தி பேசினாலும் அதற்கான தண்டனையை மக்கள் கொடுப்பார்கள். நாட்டு மக்களின் நன்மை தான் எங்கள் லட்சியம் .இன்றைக்கு 52 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது. பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் விசைத்தறிகள் இயங்காமல் இருக்கிறது. விசைத்தறிகளை எடைக்கு போடுகிற அவலநிலை உள்ள ஆட்சி திமுக ஆட்சி. சென்னிமலை பகுதி எல்லாம் நெசவுத்தொழில். அதற்கு அதிமுக மானியம் கொடுத்தது. அது இப்போது இல்லை.

இன்று கடுமையான விலைவாசி உயர்வு. தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் திண்டாடுகிறார்கள். மளிகை பொருட்கள் எல்லாம் 40 சதவீதம் உயர்வு. இதையெல்லாம் குறைக்க மத்திய அரசோ, மாநில அரசோ நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் மீது கவனம் செலுத்தாத மத்திய மாநில அரசுகளுக்கு தகுந்த பதிலடியை நீங்கள் வழங்க வேண்டும்

திமுக தேர்தல் அறிக்கையில் பல அறிக்கைளை வெளியிட்டார்கள். அதையெல்லாம் நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் செய்வதாக அறீவித்தார்கள்.. ஆனால் செய்யவில்லை. வரிகளை உயர்த்தி விட்டார்கள்.

பொங்கலுக்கு 2500 ரூபாய் பரிசு கொடுத்தது அதிமுக. முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் எல்லோருக்கும் வயிறாற 7 லட்சம் பேருக்கு உணவு அளித்த அரசாங்கம் அதிமுக. தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு மாதம் தலா ஆயிரம் ரூபாய் உதவி வழங்கிய அரசாங்கம் அதிமுக அரசாங்கம். இன்றைக்கு அதை நிறுத்தி விட்டார்கள்.

மாதம்தோறும் மின்கட்டண கணக்கீடு செய்யப்படும் என்றார்கள் அதை செய்யவில்லை. கல்விக்கடன் ரத்து செய்வதாக சொன்னார்கள். ஆனால் செய்யவில்லை. அதிமுக திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டார்கள். 
அதிமுக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்னும் அற்புதமான திட்டத்தை ஸ்டாலின் ரத்து செய்து விட்டார். 52 லட்சம் மாணவர்களுக்கு அதிமுக மடிக்கணினி கொடுத்தது. அதை நிறுத்தி விட்டார்கள்.

ஏழை, எளிய மக்களுக்கு மினி கிளினிக் திறக்கப்பட்டது. அந்தந்த பகுதி மக்களுக்கு அருகிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைய்ம் நிறுத்தி விட்டார்கள். தாலிக்கு தங்கம் திட்டத்தையும் ரத்து செய்து விட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகமாக தருவதாக சொல்லி இப்போது நிறுத்தி விட்டார்கள்.

அம்மா சிமெண்ட், அம்மா உப்பு திட்டங்களை நிறுத்தி விட்டார்க்ள். 190 ரூபாய்க்கு விற்ற சிமெண்ட் 350 ரூபாய்க்கு விற்கிறது. செங்கல், ஜல்லி எல்லாம் உயர்ந்து விட்டது. 

மக்களை வாட்டி வதைக்கிற அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம். கஞ்சா கிடைக்காத இடமே தமிழ்நாட்டில் இல்லை. சாக்லேடில் கொடுக்கிறார்கள். போதை மாத்திரை, ஊசி எல்லாம் திமுக ஆட்சியில் நிறைந்து கிடக்கிறது. மாணவர்களும், இளைஞர்களும் இந்த ஆட்சியில் சீரழிகிறார்கள்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது ஊர் ஊராக ஒரு பெட்டியை வைத்தார். இதில் குறைகளை எல்லாம் போடுங்கள் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்த பிறகு அதை காணவில்லை. 

எங்களை நம்புகிற மக்களுக்கு எப்போதும் நாங்கள் துரோகம் செய்தது கிடையாது. உங்களை போல் ஏமாற்றுகிற கட்சி அண்ணா திமுக அல்ல. எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை செயல்படுத்தும் இயக்கம் அதிமுக. அம்மா அவர்கள் மிக்சி, கிரைண்டர் அறிவித்தார்கள் கொடுத்தோம். அறிவிக்காத திட்டம் மடிக்கணினி கொடுத்தோம். 

ஆனால் கடந்த 3 ஆண்டுகால ஆட்சி தான் இருண்ட ஆட்சி. ஒரு கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். காலிங்கராயன் வாய்க்காலில் சாராய கழிவு கலப்பதாக சொன்னார் . சாயக்கழிவு என்று சொல்வதற்கு பதிலாக சாராயக்கழிவு என்கிறார். இவரெல்லாம் முதல்வராய் இருந்து என்ன செய்வது. காலிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவு கலக்காமல் இருக்க திட்டமிட்டு செயல்படுத்தியது அதிமுக அரசு. 

ஈரோடு மக்களுக்கு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தோம். 10 சதவீத பணிகள் தான் அதில் பாக்கி இருந்தது. திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். குடிநீரில் கூட அரசியல் செய்கிறார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 1000 கோடியில் ஈரோடை அழகுபடுத்த திட்டம் கொண்டு வந்தது அதிமுக. காங்கயத்தில் கூட்டுக்குடிநீர், சென்னிமலையில் தீயணைப்பு நிலையம், காலிங்கராயன் வாய்க்கால் கரையை உயர்த்தினோம். அரசு மருத்துவமனை அருகில் 54 கோடியில் மேம்பாலம், ஈரோடு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. சூப்பர் ஸ்பெஷாலிட்ட்டி திட்டம் கொடுத்தோம். அதையும் திறக்கவில்லை. திருச்செங்கோடு - ஈரோடு புறவழிச்சாலை என பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது. 

சங்ககிரி, ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையில் 44  கோடியில் ரயில்வே மேம்பாலம் என பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 
அரசுப்பள்ளியில் படிக்கிற மாணவர்கள்3.55 லட்சம் பேர் படிக்கும் நிலையில், 3 பேர் தான் நீட் பாஸ் செய்தார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்க ஏழரை சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து மருத்துவப்படிப்புக்கு வழி செய்தோம். இன்று 2100 பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். 

இது தான் அதிமுகவின் சாதனை. ஆகவே ஆற்றல் அசோக்குமார் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழர் உரிமை மீட்போம். தமிழ்நாடு காப்போம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். வாக்களிப்போம் இரட்டை இலைக்கே. 
Previous Post Next Post