*விழித்துக் கொண்ட வாக்காளர்களால் ஜனநாயகம் காக்கப்படும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நம்பிக்கை!*
இந்திய நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவகையொட்டி அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம், வாக்காளர்கள் கேள்வி கேட்கும் தரமான சம்பவங்கள் அதிகரித்து அரங்கேறி வருகின்றன. இது எதை காட்டுகிறது என்றால் நமது வாக்காளர்கள் விழித்துக் கொண்டார்கள் என்பதையே காட்டுகின்றது. குறிப்பாக ஏற்கனவே போட்டியிட்ட ஒரு வேட்பாளர் அதே தொகுதியில், பல்வேறு வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்து வெற்றி பெற்ற பிறகு அதனை நிறைவேற்றாமல், குறைந்தபட்சம் தன்முனைப்போடு அதற்கான முயற்சிகளையோ நடவடிக்கையோ போராட்டமோ மேற்கொள்ளாமல் மீண்டும் போட்டியிடுகின்ற பொழுது, தொகுதி பக்கம் ஏன் திரும்பி வரவில்லை, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை, தொகுதியை மறந்து விட்டு ஓட்டு கேட்க மட்டும் ஏன் வருகிறீர்கள் என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றார்கள். மேலும் சிலர் மக்கள் பிரச்சினைக்காக அவ்வப்போது நடைபெற்ற போராட்டங்களில் கூட கலந்து கொள்ளாமல் இப்பொழுது மட்டும் வருவது நியாயமா என்றும் தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டி தீர்க்கும் சம்பவங்களை ஆங்காங்கே அதிகமான அளவில் காணமுடிகிறது. அதேபோல கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு தேர்தல் புறக்கணிப்பு என்னும் போராட்டங்களும் பல்வேறு இடங்களில் தலைத் தூக்கி உள்ளன. இச்சம்பவங்கள் அத்தனையும் வாக்காளர்கள் விழித்துக் கொண்டதையே காட்டுகின்றது. ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்கின்ற பொழுது இன்னும் அதிகாரத்தோடு கேள்வி கேட்கும் வாய்ப்பு உண்டு என்பதை உணர்ந்து ஒவ்வொரு வாக்காளரும் இந்த தேர்தலில் நேர்மையாக தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிட முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் என்றும், விழித்துக் கொண்ட வாக்காளர்களால் ஜனநாயகம் காக்கப்படும் என்னும் நம்பிக்கை பிறந்துள்ளது என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவித்துள்ளார்.