அதிமுக ஆட்சியில் நமது அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா்,தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


 அதிமுக ஆட்சியில் நமது அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா்,தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அதிமுக ஆட்சியில் நமது மொழி உரிமை, நிதி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா். அதனால்தான் இந்த பிரசாரத்துக்கு மாநில உரிமை மீட்பு பிரசாரம் என தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது : இந்திய ஒன்றியத்தில் ஆதிக்கவாதிகளை அகற்றுவதற்கான பிரச்சாரத்தை கடந்த 23- ஆம் தேதி தொடங்கிய நிலையில், நூறாவது பிரச்சாரக் கூட்டமாக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக துணை பொதுச் செயலாளர் அத்தை கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். ஆனால் இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதி தூத்துக்குடி தொகுதியாகத்தான் இருக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ், பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் விலை குறைக்கப்படும். 

சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் உபரி நீரை ஓட்டப்பிடாரம் சுற்றியுள்ள பகுதிகள் பயன்பெறும் வகையில் புதிய பாசன கால்வாய் அமைத்துத் தரப்படும்.  கோரம்பள்ளம், குலயைன்கரிசல்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் புதிய புறவழி பாசன கால்வாய் அமைத்து தரப்படும். மருத்தூர் மேலகால், கீழகால் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டு "ப' வடிவ காங்கிரீட் தளம் அமைத்து தரப்படும். தமிழகத்தில் திமுகவின், காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பிற மாநிலங்களும், பிற நாடுகளும் பின்பற்றும் வகையில் முன்மாதிரியான திட்டமாக விளங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு எந்த நிதி உதவியும் வழங்காத நிலையில், தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். விவசாயிகளுக்கு, மீனவர்களுக்கு, உப்பளத் தொழிலாளர்களுக்கு என மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அரசு நிதி உதவி அளித்தது. இந்த நிதிகளை தமிழக அரசிடம் பெற்றுத்தந்தவர் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி. 

அதிமுக ஆட்சியில் நமது மொழி உரிமை, நிதி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா். அதனால்தான் இந்த பிரசாரத்துக்கு மாநில உரிமை மீட்பு பிரசாரம் என தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களவைத் தோ்தலில் திமுக அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது நிறைவேற்றப்படும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது கனிமொழி எம்.பி.யும் இங்கு நிலை சீராகும் வரை சுமாா் 2 மாத காலங்கள் தங்கி இருந்து பணியாற்றினாா். மழை வெள்ளத்தின் போது பிரதமா் இங்குள்ள மக்களை வந்து சந்திக்கவில்லை. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தூத்துக்குடி வந்து பாா்வையிட்டாா். தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரணத் தொகையை அவா்கள் தரவில்லை. ஆனால் பேரிடரின் போது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரணங்களை வழங்கியது திமுக தலைமையிலான ஆட்சி. மத்திய அரசு மிக்ஜாம் புயலுக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கும் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை.

தமிழகத்தில் ஜெயலலிதா நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தாா். அவா் இறந்த பின்னா் முதல்வரான பழனிசாமி நீட் தோ்வுக்கு அனுமதி கொடுத்து விட்டாா். பிரதமா் மோடி மட்டுமல்ல, பாஜகவினா் மொத்தமாக வந்து தமிழ்நாட்டில் வீடு எடுத்து குடியேறினாலும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நான் பேசினால் கோபப்பட வேண்டியது பாஜகவினா்தான். ஆனால் கோபப்படுவதோ எடப்பாடி பழனிசாமி. அவா்களை பேசினால் இவருக்கு எதுக்கு கோபம் வருகிறது?

திராவிட மாடல் ஆட்சியின் கடந்த 3 ஆண்டு கால சாதனைகள், வேட்பாளா் கனிமொழி கடந்த 5 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு ஆற்றிய பணிகள் ஆகியவற்றுக்காக அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். இப்பிரசாரத்தில், வேட்பாளா் கனிமொழி, அமைச்சா்கள் பெ. கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் மாா்க்கண்டேயன், மேயா் ஜெகன் பெரியசாமி, நகர திமுக செயலா் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

Previous Post Next Post