தூத்துக்குடிக்கு ஏன் வெள்ள நிவாரணம் தரவில்லை என்று ஒரு வார்த்தை மோடியை கேட்டிருக்கிறாரா எடப்பாடி?- தேர்தல் பரப்புரையில் கனிமொழி கேள்வி
பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை தப்பு சொல்ல மாட்டார். தூத்துக்குடிக்கு ஏன் வெள்ள நிவாரணம் தரவில்லை என்று ஒரு வார்த்தை மோடியை கேட்டிருக்கிறாரா எடப்பாடி? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி இன்று விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனை, நாகம்பட்டி, குதிரைகுளம், பரமன்பச்சேரி, சில்லாங்குளம், கீழமங்கலம், மேலமங்கலம், மேலமுடிமன், கீழமுடிமன், பி.துரைச்சாமிபுரம், பி.மீனாட்சிபுரம், எப்போதும் வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், குமரெட்டியாபுரம், வெள்ளாரம், கச்சேரிதளவாய்புரம், சிவஞானபுரம், வீரபாண்டியபுரம், டி.சுப்பையாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்!
அப்போது கனிமொழி கருணாநிதி எம்பி. பேசும்போது, "நான் எம்.பி.யாக இருந்த இந்த காலகட்டத்தில் உங்கள் கோரிக்கையை ஏற்று பசுவந்தனை ஊராட்சியில் 15 லட்சம் ரூபாய் கலையரங்கம் கட்டும் பணிக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேலை விரைவில் தொடங்கும். குதிரைகுளம் ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டும் பணிகள் தொடங்கிவிட்டன. இது இல்லாமல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் பள்ளி கழிவறைக் கட்டிடங்கள் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் மொத்தம் 51 லட்சம் மதிப்பில் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் முதலமைச்சர் இங்கே வந்து உலகில் மிகப்பெரிய கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அந்த ஆலை இன்னும் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். அதன் பின் நமது பகுதியில் இருக்கக் கூடிய இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திடம் முதல்வர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். எனவே நம்மூர் இளைஞர்கள், இளம்பெண்கள் பலருக்கும் இந்த ஆலையில் வேலை கிடைக்கும்.
பனைப் பொருட்கள் உடல் நலனுக்கு நன்மை என்று உலகம் முழுவதிலும் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். விளாத்திகுளத்தில் பனை பொருட்கள் உள்ளூரில்தான் விற்றுக் கொண்டிருக்கிறோம். பனைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையில் பனை பொருள் ஏற்றுமதி மையத்தை இங்கே அமைப்பதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். விரைவில் தேர்தல் முடிந்தவுடன் அந்த மையம் இங்கே அமைக்கப்படும். இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி பல்வேறு திட்டங்களை நமது அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கிற ஆட்சி நமது ஆட்சி. பேருந்தில் பெண்களுக்கு இலவச விடியல் பயணம் தந்த ஆட்சி நமது ஆட்சி. இதன் மூலம் கிராமப்புற, நகர்ப்புற பெண்கள் மாதம் 900 ரூபாயை சேமிக்கிறார்கள். இதேபோல அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழும், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதம் ஆயிரம் ரூபாய் அளிக்கிறார் நமது முதலமைச்சர். கல்லூரியில் போய் நம் பிள்ளைகள் படிக்க எந்த தடையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் இந்தத் திட்டங்களை செயல்படுத்துகிறார்.
டெல்லியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்குவதில்லை. நாம் வெள்ளத்தில் தவித்தபோது கூட அவர்கள் ஒரு ரூபாய் நிதியுதவி செய்யவில்லை. அப்போது மோடி நம்மை எட்டிக் கூட பார்க்கவில்லை. ஆனால் இப்போது ஓட்டுகேட்டு வந்து கொண்டே இருக்கிறார். அவர்கள் எந்த சின்னத்தில் நின்றாலும் மக்கள் ஓட்டுப் போடப் போவதில்லை.
பாஜக என்ன சொல்லுது? பெரும்பான்மையான இந்துக்களுக்கு நாங்கதான் பாதுகாப்பு என்று சொல்லுது. என்ன செஞ்சாங்க? இந்து மக்களுக்கு வேலை கொடுத்தார்களா? நம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கட்டினார். ஆனால் அந்த கல்லூரிகளில் நம் சாதாரண சாமானிய இந்துப் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காக நீட் தேர்வை திணிக்கிறார்கள். இது இந்துக்களுக்கு எதிரானது இல்லையா?
கோயில்களை எல்லாம் திமுக இடித்துவிடும் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். 1330 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பவர் நமது முதலமைச்சர் அவர்கள். கிராமங்களில் இருக்கும் சின்னச் சின்ன கோயில்களிலும் பூஜை நடைபெற வேண்டும் என்பதற்காக 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கும் ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
மகளிர் உரிமைத் தொகை மூலம் ஆயிரம் ரூபாய் பெறுவது பெரும்பான்மை இந்து மக்கள்தானே... ஆனால் பாஜக ஆட்சியில் வருடத்துக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறினார். ஆனால் வேலை கேட்கும்போது பக்கோடா போடுங்கள், அதுவும் வேலைதான் என்கிறார். இந்த ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியும், அதிமுக பத்து வருடம் ஆட்சியில் இருந்தபோது செய்தது ஒன்றுதான். ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 13 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதுதான் இந்த பகுதிக்கு அதிமுக செய்தது. இன்று நாங்கள் வேறு, பாஜக வேறு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் சும்மா. தேர்தல் முடிந்ததும் இருவரும் ஒன்றாகிவிடுவார்கள். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை தப்பு சொல்ல மாட்டார். தூத்துக்குடிக்கு ஏன் வெள்ள நிவாரணம் தரவில்லை என்று ஒரு வார்த்தை மோடியை கேட்டிருக்கிறாரா எடப்பாடி?
எப்போதும் வென்றான் பகுதிக்கு நீங்கள் மேம்பாலம் வேண்டுமென்று கேட்டிருந்தீர்கள். எதையுமே செய்யாத மத்திய பிஜேபி அரசிடமிருந்து அனுமதியை பெற்று, இப்போது எல்லா துறை அனுமதியையும் வாங்கியாகிவிட்டது. விரைவில் பணிகள் நடைபெறும்.
நமது திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நூறுநாள் வேலைத் திட்டத்தை மோடி இப்போது முடக்கிவிட்டார். அதை மீண்டும் கொண்டுவந்து வேலை நாட்களை 150 நாட்களாக்கி, சம்பளம் ஒரு நாளைக்கு 400 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார் நமது முதலமைச்சர். இவையெல்லாம் நடக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக உங்களுக்கு மீண்டும் பணியாற்ற எனக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்று பரப்புரையில் குறிப்பிட்டார் கனிமொழி கருணாநிதி.
இந்த பரப்புரையின் போது உடன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான திருமிகு கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, ஒன்றிய குழுத் தலைவர் திரு.ரமேஷ், ஒன்றிய செயலாளர் திரு.அன்புராஜ், திரு.காசி விஸ்வநாதன், திரு.சின்ன மாரிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்!