"தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் வகையில் பாஜகவினர் பேசி வருகின்றனர்" - தேர்தல் பரப்புரையில் கனிமொழி கருணாநிதி குற்றச்சாட்டு.!
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட லிங்கம்பட்டி, பூசாரிபட்டி, தாமஸ் நகர் மணி கூண்டு, சண்முக நகர் பேருந்து நிறுத்தம் - கடலையூர் சாலை, வடக்கு திட்டக்குளம், முத்துநகர், சண்முக சிகாமணி நகர் - பசுவந்தளை சாலை, மந்திதோப்பு, ஊத்துப்பட்டி, இடைச்செவல், இனாம் மணியாச்சி ஆகிய இடங்களில் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
அப்போது பேசிய அவர் :-
தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தும் வகையில், பேசி வரும் பாஜகவினர். குறிப்பாக இந்தி மொழி எதிர்ப்பிற்காக பலதரப்பட்ட போராட்டங்களை ஈடுபடுத்தி உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் போராட்டத்தை அருந்த செருப்பு எனக் கொச்சைப் படுத்தி உள்ள அண்ணாமலை, தமிழ்நாட்டிற்குப் புயல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பொழுது நிதி கேட்டதற்கு ஒன்றியத்தில் தற்போது உள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏன் பிச்சை கேட்கின்றனர் என்று இழிவுபடுத்தியதையும், முன்னாள் நடிகையும், தற்போது பாஜகவில் உள்ள ஒருவர், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை பிச்சையெனக் கூறியுள்ளனர் என்று சாட்டினர்.
மேலும் ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் நிதியாக அளிக்கும் பொழுது நமக்கு 25 பைசா மட்டுமே நிதி பகிர்வாக அளித்து வருகிறது, ஆனால் ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் இரண்டு ரூபாய் என இரட்டிப்பு நிதி பகிர்வு அளித்து, தமிழ்நாட்டை ஓரா வஞ்சனை செய்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி பேசிய அவர் தமிழ்நாடு கடந்த டிசம்பர் மாதம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் மக்களின் பாதிப்புகளைப் பார்க்காத பிரதமர், தேர்தல் சமயம் என்றவுடன் 10 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்று உள்ளார் என்றார்.
பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவதாகக் கூறியவர் இதுவரை அதை நிறைவேற்றவில்லை, மேலும் வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருந்தால் அபராதம் என்ற பெயரில் நாம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்கின்றனர். அது போன்ற செயல் ஒன்றியத்தில் நாம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் பொழுது தொடராது என உறுதி அளித்தார்.
தூத்துக்குடி பகுதியில் திமுக அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களைப் பட்டியலிட்டு , பூசாரிபட்டியில் தொழில்பேட்டை, தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் சார்பில் 16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள உலகிலேயே மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலை, தாமிரபரணியில் இருந்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் வழங்கும் திட்டம், மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வரும் கூட்டுக் குடிநீர் திட்டம், துணை சுகாதார நிலையம் போன்றவற்றை எடுத்துரைத்து, மக்களின் கோரிக்கைகளான குடிநீர் தேவை பூர்த்தி செய்வது, சமுதாய நலக்கூடம் போன்றவற்றிற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் அறிவுறுத்தினார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தூத்துக்குடியில் உலகிலேயே பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலையில் தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் இளம் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதையும், அவர்களுக்கு அத்தகைய திறன் இல்லை என்றாலும், அவர்களுக்கு ஆறு மாத காலம் திறன் பயிற்சி அளித்து வேலை வழங்க உள்ளதையும் கூறினார்.
பாஜகவும் - அதிமுகவும் பிரிந்துவிட்டதாக கூறுவது நாடகமானது, தேர்தல் முடிந்த பிறகு அதிமுக பாஜகவை ஏற்றுக் கொள்ளும், தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளும் எடப்பாடி எங்காவது பாஜகவைப் பற்றியோ, மோடியை பற்றியோ வாய் திறக்கவில்லை. அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான், இரண்டுமே ஸ்டிக்கர் கட்சிகள், முன்னாள் மாற்றுக் கட்சியின் அரசு கொண்டு வந்த திட்டங்களை பெயர் என்னும் ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கொண்டு வந்தது போலக் காட்டிக் கொள்கின்றனர்.
அத்தியாவசிய ஆதார விலை வேண்டி விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அந்த மசோதாவிற்குக் கையெழுத்து விட்டது அதிமுக தான், விவசாயிகளைத் தீவிரவாதிகள் போல ட்ரோன்கள் மூலம் புகை குண்டுகள் வீசியும், டெல்லிக்குள் நுழையக்கூடாது என்று சாலைகளில் ஆணிகள் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தி அவர்களை தாக்கியுள்ளனர், மேலும் பாஜகவின் ஒரு அமைச்சரின் மகன் விவசாய மக்கள் மீது காரை ஏற்றித் தாக்கியுள்ளார் எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
ஒன்றியத்தில் மக்களுக்கான ஒரு ஆட்சி அமைய வேண்டும், மதத்தால் ஜாதியால் பிரிவினையை ஏற்படுத்தி வரும் இவர்களை விரட்டி அடிக்க வேண்டும், 40-ம் நமதே நாடும் நமதே என்று கூறி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தனக்கு வெற்றியைப் பெற்றுத் தர வேண்டுமெனத் தெரிவித்தார்.
சென்ற முறை அவர் நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற பொழுது எதிர்க்கட்சியினர் அவர் சென்னையை சேர்ந்தவர் வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு வர மாட்டார் என்று தேர்தல் பரப்புரை செய்ததை சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தொகுதியின் ஒரு அங்கமாகவும், அவர்களில் ஒருவராக இருந்து வருவதாகவும், தூத்துக்குடி என்பது தனக்கு இரண்டாவது தாய் வீடாக உள்ளது, தொடர்ந்து மக்களுக்காக பணி செய்து வருகிறதாகவும், கொரோனா காலம், மழை வெள்ள காலத்தில் போன்றவற்றில் மக்களுக்காக களத்தில் துணை நின்றதையும் எடுத்துரைத்தார்.
கோவில்பட்டி இடைச்செவல் பகுதியைச் சேர்ந்த மறைந்த தமிழ் வாழ்வியல் எழுத்தாளர் கி.ராஜா நாராயணன் என்னும் கி.ரா அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது, தமிழ்நாடு வரலாற்றில் ஒரு எழுத்தாளருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது என்றால் அதில் கி.ரா அவர்களுக்கு மட்டுமே, தமிழ் வாழ்வியல் வரலாற்றில் எழுத்தாளர் கி.ரா அவருக்கு நூலக வசதியுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்தி உள்ளார் நாம் தமிழ்நாடு முதலமைச்சர் என தெரிவித்தார்.
இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், முருகேசன் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.