*ஓட்டுக்கு பணம் கொடுக்காததே ஜனநாயகத்தின் முதல் வெற்றி!*என்று *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!*
இந்திய திருநாட்டில் பதினெட்டாவது பாராளுமன்றத் தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பல தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. இதனால் உண்மையான ஜனநாயகம் விற்கப்பட்டு பணநாயகம் மேலோங்கி விட்டதே என்னும் பெருங்கவலை அனேக மக்களிடம் ஆழ்மனதில் பதிந்து எப்பொழுது தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும், எப்படி பணம் கொடுப்பதை தடுக்க முடியும், அதிலிருந்து மக்களை மீட்டெடுத்து மீள்வது எப்பொழுது என்று அடுக்கடுக்கான கேள்விகள் இருந்து வந்தன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் 99 சதவீதம் பகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்த இனிய நற்செய்தி நம்முடைய காதுகளில் எட்டிய பொழுது ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று அன்று மகாகவி பாரதி பாடிய வரிகள் தான் நமது நினைவுக்கு வந்தது. ஆடுவோமே பள்ளு பாடுவோமே உண்மையான ஜனநாயகம் வந்துவிட்டதே என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்த திருநாளாக ஜனநாயக திருவிழாவாக ஏப்ரல் 19 மாறியது என்றால் அது மிகையாகாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அரசு எந்திரத்தால் தடுக்கவே முடியவில்லை. தந்திரமாக இரவில் கொடுத்தார்கள் பகலில் கொடுத்தார்கள் டோக்கன் கொடுத்தார்கள் எந்த ரூபத்தில் வந்து கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதனால் பறக்கும் படை அமைத்தும் பலனிலேயே என்று தேர்தல் ஆணையம் திக்கு முக்காடி நின்றதை இந்த நாடே பார்த்தது. நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடர்ந்தும். சில தொகுதிகளில் தேர்தலையே நிறுத்தியும் பலனளிக்கவில்லை. கட்டுப்படுத்தவும் முடியவில்லையே என்னும் நிலையே நீடித்தது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியுமா என்பதைப் போல இவ்விஷயத்தில் முழிப்பிதுங்கி நின்ற தேர்தல் ஆணையத்திற்கு தற்பொழுது தான் விடிமோட்சம் கிடைத்துள்ளது. ஜனநாயகம் தழைத்துள்ளது என்பது உறுதி. அதுவே நிதர்சனம். ஆகவே தொடர்ந்து இந் நடைமுறை பின்பற்றப்பட அனைத்துக் கட்சிகளும் பூரண ஒத்துழைப்பு தர வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை எதிர்காலத்தில் இன்னும் முழுமையாக சுவாசிக்க அனைவரும் முற்படுவோம். அதற்காக சபதமேற்போம். வாழ்க ஜனநாயகம் என்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்காததே ஜனநாயகத்தின் முதல் வெற்றி என்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.