மக்களிடம் எதிர்மறை எண்ணத்தைக் களைந்து, சிந்தித்து செயல்படும் நேர்மறை எண்ணத்தை வளர்த்தவர்கள் நம் முன்னோர்கள்" என்று சைவ சித்தாந்தக் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர் முருகானந்தம் பேசினார்.
திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை சார்பாக "தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்" எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று அலகுமலை, அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருப்பணிக் குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் பொருளாளர் சரவண சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். தொழிலதிபர் கந்தசாமி, அறக்கட்டளையின் அமைப்பாளர் கொங்கு ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூலவர் முன்பு வைத்து பூஜிக்கப்பட்ட புத்தகங்களை சின்னுக்கவுண்டர் வெளியிட, வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் ஆடிட்டர் விட்டல்ராஜன், மென்பொருள் உற்பத்தி நிறுவன உரிமையாளர் சரவணபிரசாத், வளம் ரவி, ராதிகா முரளி, சக்தீஸ்வரன், சுப்பிரமணியன், லட்சுமிபிரியா, திலீப்குமார், விக்னேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சைவ சித்தாந்தக் கழகத்தின் சமூக ஊடகப்பிரிவு மாநில பொறுப்பாளர் முருகானந்தம் கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:
"மக்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணத்தைக் களைந்து, பக்தி நெறியுடன் நேர்மறையாக சிந்தித்து செயல்படும் எண்ணத்தை வளர்த்தவர்கள் நம் முன்னோர்கள். அதுமட்டுமல்லாது அவர்கள் தமிழில் உள்ள எளிமையான சொற்கள் மற்றும் பேச்சு வழக்கின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனையும் நல்வழிப்படுத்தும் நூல்கள் பலவற்றை எழுதி உள்ளார்கள். நமது தாய்மொழி தமிழானது பழமைக்கும் பழமையானது, புதுமைக்கும் புதுமையானது. பல்லாயிரம் ஆண்டுகளாக பேச்சு வழக்கில் உள்ள ஒரே மொழி நமது தமிழ் மொழி. நமது மொழியின் பழமையான சிறப்பாலும், சிறப்பான இலக்கண கட்டமைப்பாலும், புதிய இலக்கியங்களின் பிறப்பாலும் காலத்திற்குத் தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. இலக்கியத்தில் அனைத்து சமய நம்பிக்கைகளுக்கும் தமிழ் இலக்கியம் இடமளிக்கிறது. சண்முகரை போற்றும் பக்தர்கள் இயற்றிய இலக்கியங்கள் பலவும் தமிழ் மொழி வளர்ச்சியின் மையத்தில் இடம் பிடித்துள்ளன. பேசும் திறன் இல்லாதிருந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் செந்திலாண்டவர் அருளால் பேசும் திறன் வாய்த்தது. முருக பக்தியை இயக்கமாகவே வழிநடத்தியவர் பாம்பன் சுவாமிகள். சாந்தானந்த சுவாமிகள் இயற்றிய கந்த குரு கவசம் பாடுவதால் இறையருள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே தனி மனிதனை நெறிப்படுத்த, நம் தமிழ் மொழியில், எளிய இலக்கியத்துடன் பாசுரங்கள் பல இயற்றிய, நம் முன்னோர்களின் பணிகள் மிகவும் அளப்பரியவை..."
இவ்வாறு பேசினார்.
அறக்கட்டளையின் செயலாளர் மோகனப்பிரியா நன்றி கூறினார்.
அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு மற்றும் முக்கனி பிரசாதம் தாம்பூலப்பையில் வைத்து வழங்கப்பட்டது.