தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தன்டணை : ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை


 தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தன்டணை : ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலை நியாயமான/ அமைதியான முறையில் நடத்திடும் வகையில் தேர்தல் தொடர்பான கட்டுப்பாடுகளை அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் /  மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 7.00 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய 48 மணி நேரமான 17.04.2024 புதன்கிழமை அன்று மாலை 6.00 மணிமுதல் 19.04.2024 வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடியும்வரை  வேட்பாளர்கள் / அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரம்/ ஊர்வலம் / பொதுக் கூட்டம் நடத்துவதற்கும், சினிமா / தொலைக்காட்சி அல்லது வேறு மின்னணு கருவிகள் வாயிலாக தேர்தல் தொடர்பான காட்சிகள் வெளியிடுவதற்கும், தேர்தல் பரப்புரை செய்வதற்காக இசை கச்சேரிகள்  /  நாடகங்கள் நடத்துவதற்கும் முழுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதனை மீறுபவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் வரை சிறை தன்டணையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் வாக்காளாராக இல்லாத நபர்களும்/ வேறு தொகுதியைச் சார்ந்த நபர்களும்  தேர்தல் பரப்புரைக்காக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் விடுதிகள்/ திருமண மண்டபங்களில் தங்கியுள்ள அரசியல் கட்சியினர் / பிரசார அமைப்பாளர்கள் அரசியல் கட்சி பணியாளர்கள் தேர்தல் பிரசாரம் முடிவுற்ற 17.04.2024 புதன்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு முன்பாக தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள்/ விடுதிகள் / சமூக கூடங்கள் ஆகியவற்றில் காவல்துறையினர் சோதனை நடத்தி தேர்தலுக்கு தொடர்பில்லாத சந்தேகப்படும்படியான நபர்களை  கண்டறிந்து மாவட்டத்தை விட்டு உடன் வெளியேற்ற வேண்டும். 

மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் வேறுமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தேர்தலுக்கு சம்மந்தமில்லாத நபர்களின் வருகை தடுத்து நிறுத்தப்படும். தேர்தல் பரப்புரைக்காக வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகன அனுமதிகள் அனைத்தையும் 17.04.2024 அன்று மாலை 06.00க்கு பின்பு பயன்படுத்தக்கூடாது. செயல்பாட்டில் இருக்காது. வாக்குப்பதிவு நாளன்று மட்டும் வேட்பாளரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தூத்துக்குடி தொகுதி முழுவதற்கும் செல்லதக்க வகையில் ஒரு வாகனமும், வேட்பாளரின் முகவருக்கு ஒரு வாகனமும், சட்டமன்ற தொகுதிவாரியாக வேட்பாளரின் முகவர்/ கட்சி பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு ஒரு வாகனமும் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும்.

வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து செல்வதற்காக எந்த வாகனத்தையும் வேட்பாளர்கள் பயன்படுத்துவது  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் -1951 பிரிவு 133 ன்படி தன்டணைக்குரிய குற்றமாகும். வாக்குப்பதிவு நாளன்று கட்சியினர்/ வேட்பாளர்களால் அமைக்கப்படும் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். 

இந்த அலுவலகத்தில் வாக்காளர் எண் சரிபார்ப்புக்காக மட்டும் குற்ற பின்னணி இல்லாத 2 நபர்கள் ஈடுபடுத்தப்படலாம். இந்த தற்காலிக அலுவலகத்தில் தேவையற்ற கூட்டம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தலை நியாயமான/ அமைதியான முறையில் நடத்திடும் வகையில் மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றும்படி அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post