தூத்துக்குடி : வாக்கு சேகரிப்பில் சட்டென மாறிய பிளான் - காய்கறி சந்தை, மீனவர் பகுதிகளில் நடந்து சென்று வாக்கு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.!


 தூத்துக்குடி : வாக்கு சேகரிப்பில் சட்டென மாறிய பிளான் - காய்கறி சந்தை, மீனவர் பகுதிகளில் நடந்து சென்று வாக்கு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சிந்தலக்கரையில் பிரச்சாரம் செய்கிறார். முன்னதாக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இரவில் தனியார்  ஓட்டலில் ஓய்வெடுத்தார். 


தூத்துக்குடி தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த முதல்வர் மு. க.ஸ்டாலின், இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, தூத்துக்குடி தமிழ்சாலை வழியாக வந்து, தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கனி சந்தையில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து காய்கறிகள் வரத்து, காய்கறிகள் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

அப்போது பாரதிநகரை சேர்ந்த மேரி என்ற மூதாட்டி சந்தையில் வைத்து தான் காய்கறி வாங்க கொண்டு வந்த பணம் ரூ.1500 தொலைந்து விட்டதாக முதல்வரிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் உடனடியாக தி.மு.க சார்பில் ரூ.2000 வழங்கி மூதாட்டிக்கு உதவிசெய்தார்.


பின்னர், வாகனம் மூலம் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வழியாக சென்று தூத்துக்குடி லையன்ஸ் டவுண் பகுதியில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். 

தொடர்ந்து, லயன்ஸ் டவுண் பகுதியில் உள்ள சூசை தப்பாஸ் என்ற மீனவர், வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார். பின்னர், தூத்துக்குடி மாநகர பகுதி முக்கிய சாலைகள் வழியாக வாகனத்தில் சென்றபடி தமிழக முதல்வர் கனிமொழியை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்  மக்கள் அதிகம் கூடக்கூடிய  காய்கனி மார்கெட்டில் இறங்கி வாக்கு சேகரித்தது, தூத்துக்குடியில் குறிப்பிட்ட அளவு மிகப்பெரிய வாக்கு வங்கியாக திகழும் மீனவர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கக்கூடிய லயன்ஸ் டவுண் பகுதியில் நடந்து சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தது, மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தியது என காலையிலேயே பரபரப்பு காட்டி விட்டு சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயா் ஜெகன் பொியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, ஓன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், மாநகர அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன் சிங் பரமசிவன், பால்ராஜ்  உள்பட பலர் பங்கேற்றனர்.

இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள கனிமொழி, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

Previous Post Next Post