முடிஞ்சா ஏறிப்பார்’ன்னு நம்ம மனோதிடத்தை சோதிக்குற கரடு முரடான மலை... இதுக்கு முன்னாடி நாம பாத்திருக்கவே முடியாத மூலிகைக்காடு... சிறுவாணிக்கே தண்ணி தர்ற சுனைகள்... குளிச்சா செம்மையா ஒரு ஃபீல் தர்ற ஆண்டி சுனை.. இதையெல்லாம் தாண்டி கால்கடுக்க நடந்து போனோம்னா... ஏழாவது மலை உச்சில பஞ்ச மூர்த்தியா உட்காந்திருக்காரு வெள்ளியங்கிரி ஆண்டவர்...
நம்ம கோயம்பத்தூர் பக்கத்துல இருக்குற வெள்ளியங்கிரி மலை தெரியாதவங்க இருக்கவே முடியாதுங்க... யானை, சிறுத்தை அப்புறம் புலின்னு ஏகப்பட்ட மிருகங்கள் சுத்தக்கூடிய வனப்பகுதியில இந்த மலை இருக்குறதாலயும், மலைமேல கடுமையான குளிர் இருக்குறதாலயும் தை, மாசி, பங்குனி, சித்திரை வைகாசி மாசங்கள்ல மட்டும் தான் இங்க மலையேற முடியும். அதனால மக்கள தரிசனத்துக்கு அனுமதிச்சா போதும் கூட்டம் அள்ளிக்கிட்டு வந்துடும்.. ரொம்ப கஷ்டமான மலையேற்றம், ஆனாலும் மலை ஏறுனவங்கள்ல பலபேரு அடுத்தடுத்த வருஷமும் தவறாம வர்றாங்க பாருங்க...அதாங்க வெள்ளியங்கிரி ஆண்டவர் மேல இருக்குற பக்தி...
சரி வெள்ளியங்கிரி மலை போகணும்னா, தமிழ்நாட்டோட எந்த பகுதில இருந்தாலும், நம்ம கோயம்புத்தூருக்கு ரயிலோ, பஸ்சோ பிடிச்சு வந்துடணும். கோயம்புத்தூர் ஜங்சன் ரயில்வே ஸ்டேசன்க்கு வெளில வந்தாவே பஸ் ஸ்டாப் இருக்கு...இங்க இருந்து வரிசையா பஸ் கிடைக்கும்.. .இது தவிர காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் போனோம்னா அங்க இருந்து தொடர்ச்சியா பஸ் இருக்குது. பூண்டி, ஈஷா’ன்னு போர்டு போட்டு வர்ற பஸ் எல்லாம் போகும். கோயம்புத்தூர் சிட்டில இருந்து 40 கி.மீ., தூரத்துல இருக்குற பூண்டி அடிவாரத்துக்கு சுமாரா ஒரு மணி நேரத்துல வந்துடலாம்...
பூண்டி அடிவாரத்துல இருந்து மலையேற நடைப்பயணம் தாங்க... அதுக்கு முன்னாடி நம்ம வெள்ளியங்கிரி ஆண்டவர பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்..
ஆதியும், அந்தமும் இல்லாத நம்ம சிவபெருமான், முன்னதொரு காலத்துல இந்த மலைல வந்து பஞ்சமூர்த்தியா தியானம் பண்ணுனத சொல்றாங்க... கடவுள் விஷ்ணுவே இங்க வந்து சிவபெருமானோட ஆனந்த தாண்டவத்தை தரிசனம் பண்ணி இருக்கார்.. இது தவிர வெள்ளியங்கிரி மலைக்கு காமதேனு நேரடியாக வந்து பால் சுரந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் பண்ணுனதாகவும் நம்பப்படுது...வெள்ளியங்கிரி மலையில சுயம்புவா பஞ்ச லிங்கமா அருள்பாலிக்குறாரு வெள்ளியங்கிரி ஆண்டவர்...அவரு கூடவே மனோன்மணி அம்மையாரும் அருள்பாலிக்குறாங்க... இது மட்டும் இல்லாம கிருதயுகம், திரேதாயுகம், த்வாபரயுகம் கடந்து இப்போ கலியுகத்துலயும் கும்பிடப்படக்கூடிய வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோவில் சதுர்யுகத்தையும் தாண்டி கும்பிடப்படுதுங்குறது எவ்ளோ பெரிய விஷயம் பாருங்க...
இப்படி நாலு யுகங்கள் தாண்டி அருள்பாலிக்குற வெள்ளியங்கிரி ஆண்டவர மலையேறி கும்பிட வாய்ப்பு கிடைச்சா யார் தான் விடுவாங்க... ஒவ்வொரு வருஷமும் மகாசிவராத்திரிக்கு தான் கோவில்ல பக்தர்கள தரிசனத்துக்கு அனுமதிப்பாங்க.. இந்த வருஷம் நாகராஜ்ங்கறவர் கோர்ட்ல கேஸ் போட்டு பிப்ரவரி மாசத்துலயே மலையேற அனுமதிக்கனும்னு ஆர்டர் வாங்கிட்டார்.. அதனால இனிமேல் பிப்ரவரி1 ல இருந்து மே 31 வரைக்கும் வெள்ளியங்கிரி மலைல தரிசனத்துக்கு அனுமதி இருக்குங்க.. 24 மணி நேரமும் மலை ஏற அனுமதிக்குறாங்க...
இந்த 2024 வது வருஷம் பிப்ரவரி 12 ஆம் தேதியே மலைப்பாதை திறந்துட்டாங்க... பூண்டி அடிவாரத்துல இருக்குற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்ல, வெள்ளியங்கிரி ஆண்டவரையும், மனோன்மணி அம்மையாரையும் கும்பிட்டுட்டு மலை ஏற ஆரம்பிக்கணும்.. இப்போ தான் கோவில் திறந்ததால இங்க இன்னும் கடைகள் எல்லாம் வரல.. அடிவாரத்துல இருக்குற மனோன்மணி அம்பாள் ஆர்ச் பக்கத்துல தடிகள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க தேவைப்பட்டா எடுத்துக்கலாம்... எப்படியும் சிவராத்திரி நாள், அதாவது மார்ச் 8 ந்தேதிக்குள்ள தடி விக்கிறதுக்கு டெண்டர் விட்டுருவாங்க.. அப்புறம் தடி எல்லாம் காசு கொடுத்து வாங்கணும்...
வாங்கிட்டு மெதுவா நடக்க ஆரம்பிக்கலாம்.. முதல் மலை பாருங்க... எப்பேர்ப்பட்ட மனோதிடம் கொண்டவரையும் சோதிக்குற மலை... முக்கால் அடி, ஒரு அடி ஒசரத்துக்கு கருங்கல் படி அடுக்கடுக்கா இருக்கும்.. மலை ஆரம்பிக்குற இடமே தலைக்கு மேல.. மேல ஏறிட்டே இருக்குறாங்க.. அப்படியே செங்குத்தா ஏற வேண்டியது தான்... 200 படி ஏறுனாலே பலருக்கும் மூச்சு முட்டிடுது.. அவ்ளோ கஷ்டப்பட்றாங்க.. இங்க ஒரு முக்கியமான விஷயத்தை நாம கவனிக்கணும்.. மலை ஏற நாம வந்துட்டோம்னாலே சீக்கிரம் ஏறி இறங்கணும்.ங்கற எண்ணத்த முதல்ல விட்டுரணும்... நம்மாள முடியுற அளவு மூச்சு எடுத்துக்கிட்டு ஏறணும்... ரொம்ப வயசானவங்க எல்லாம் பாருங்க.. அப்டியே நின்னு, நின்னு நல்லா அக்குமலேஷன் பண்ணி, மூச்சு வாங்கிட்டு மெதுவா போறது பார்க்கலாம்.. அது மாதிரி மெதுவா நடந்து போறது தான் நல்லது..
மலை ஏறுறதுக்கு சின்னப்பசங்களுக்கு பிரச்சினை இல்லை.. இவ்ளோ கஷ்டமான மலைலயும் சிட்டா பறக்குறாங்க... நடுத்தர வயசுக்காரங்க, வயசானவங்க எல்லாம் நார்மல் ஸ்பீட்ல போறாங்க..
சரி சரிஞ்சு கிடக்குற கல்படிகள்ல வியர்க்க விறுவிறுக்க ஏறுனோம்னா கொஞ்ச நேர்த்துல அப்டியே பழகிடும்... சுமாரா ஒரு மணி நேரத்துல முதல் மலைக்கு வந்துடலாம்.. முதல் மலைல இருக்குற வெள்ளை விநாயகர் கோவில்ல சாமி கும்பிட்டுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்... அப்புறம் நமக்கு நாமே ஒரு சபாஷ் சொல்லிக்கலாம்.. ஏன்னா இந்த முதல் மலை ஏறிட்டாலே போதும் நமக்கு நல்ல பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்.. சீசன் காலத்துல இங்க ஒரு சோடா கடை போடுவாங்க.. சோடா வாங்கி குடிச்சுட்டு மூங்கில் மரங்களுக்கு இடையில ரெண்டாவது மலைக்கு நடக்க ஆரம்பிக்கலாம்..
இது அவ்ளோ கஷ்டமான மலையா இருக்காது.. நார்மலா மரம், செடிகளுக்கு இடையில நடக்கணும்..பெரிய, பெரிய பாறைகள், அடர்ந்த காடு, மரம்ன்னு எல்லாமே செம்ம த்ரில் அனுபவமாத்தான் இருக்கும்.. இந்த மலைல கொஞ்ச நேரம் நடந்தாலே வழுக்குப்பாறை வருது... வழுக்குப்பாறைல கவனமா வழுக்கி விழாம ஏறணும்.. இப்போ எல்லாம் பாறைலயே படிகள் மாதிரி செதுக்கி இருக்காங்க.. இருபது வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆள் பாதம் வைக்குற இடம் மட்டும் தான் படி மாதிரி இருக்கும்.. கஷ்டப்பட்டு ஏறணும்.. அப்படியே ஏறி வழுக்குப்பாறை முடிவுக்கு வந்தோம்னா பாம்பாட்டி சுனை இருக்கு... கொஞ்சமா வர்ற தண்ணிய நாம கொண்டு வந்துருக்குற பாட்டில்ல பிடிச்சு குடிச்சு பார்த்தா அவ்ளோ ஆனந்தமா இருக்கும்.. செம்ம டேஸ்ட்டாவும் இருக்கும்.. சிறுவாணிக்கே தண்ணி தர்ற மலை இல்லையா வெள்ளியங்கிரி மலை... இந்த மலைச்சுனை தண்ணியோட டேஸ்ட் சாதாரணமாவா இருக்கும்... செம்மையா இருக்கும்.. அதுமட்டும் இல்லாம மலைமேல் வழிஞ்சு வர்ற ரியல் மினரல் வாட்டர் இது.. குடிச்சுட்டு ஒரு நூறு அடி ஏறுனா பாம்பாட்டி சித்தர் குகை வருது.. பாம்பாட்டி சித்தர கும்பிட்டுட்டு மறுபடியும் நடை பயணம் ஆரம்பம்... இது மூணாவது மலை ஆரம்பிக்குற இடம்னு சொல்றாங்க...
அப்படியே நடந்தோம்னா பாதி எடத்துல படிய காணோம்.. பாதி எடத்துல வழிய காணோம்னு தேடாம.. கூட்டத்துலயே குத்து மதிப்பா போகலாம்.. செருப்பு போடாம நடக்குறதால குத்துற கல்லு, சுடுற படிகள்ன்னு இது ஒரு இன்பவேதனை தாங்க.. வெள்ளியங்கிரி ஆண்டவர பார்க்கணும்னா சும்மாவா.. தஷ்சு.. புஷ்சுனு படிலயும், கல்லுலயும், மண்ணுலயும் ஏறி... ஏறி.. போயிட்டே இருக்க வேண்டியது தான்.. இறங்கி வர்றவங்க யார்கிட்டயாவது இன்னும் எவ்ளோ தூரம்ன்னு கேட்டுப்பாருங்களேன்.. ‘’இதோ கொஞ்ச தூரம் தான், பக்கம் வந்துருச்சி’ன்னு சொல்வாங்க.. நம்ம மனசு தளரக்கூடாதுன்னு அப்படி சொல்றாங்க.. கொஞ்ச தூரத்துல பாறைகளுக்கு இடையில இருக்குற கைதட்டி சுனைல தண்ணி பிடிச்சு குடிக்கலாம்..
சரி, குட்டி குட்டி குழந்தைங்க.. வயசானவங்க எல்லோருமே அசராம ஏறுறாங்க.. நாம அசரலாமா, கூடாதுன்னுட்டு ஏறணும்..ஒரு வழியா இந்த மலை முடிவுக்கு வந்து ஒரு வெட்டார வெளிய பார்க்கலாம்.. இந்த இடம் தாங்க நாலாவது மலை தொடக்கம்.. கொஞ்சம் சமவெளி மாதிரி போகுற பாதை.. பச்சை போர்த்திய புல்வெளியா இருக்குற மலைகள்.. லெஃப்ட் சைட்ல தெரியுற சிறுவாணி பள்ளத்தாக்குன்னு பார்க்க.. பார்க்க பேரின்பம் தான்.. ஏழாவது கிரிமலையும் கண்ணுக்கு தெரியும்.. ஆனந்தமா கும்பிட்டுக்கலாம்.. அப்படியே வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தோம்னா ஒட்டர் சமாதி இருக்குது.. இந்த மலைப்பாதை மேம்படுத்துன ஒட்டரோட சமாதி இது... இவருக்கு ஒரு வணக்கத்த போட்டுட்டு மறுபடியும் சாவகாசமாவே நடக்கலாம்.. திருநீர் மலைன்னு சொல்ற இந்த மலையோட மண்ணுதான் வெள்ளியங்கிரி மலை திருநீரா மக்கள் கொண்டு போறாங்க.. வெள்ளை வெள்ளையா இருக்குது..
இந்த மலையோட முடிவுல வர்ற 5 வது மலை பீமன் களியுருண்டை மலைன்னும், சீதை வனம்னும் சொல்றாங்க.. சினிமா சூட்டிங் நடத்தலாம் போல, அவ்ளோ அழகான ஏரியா இது... பார்க்க அந்தப்பக்கம் நல்லாருக்கு.. இந்தப்பக்கம் நல்லாருக்குன்னு வழி தவறி போயிடக்கூடாது... கோவிலுக்கு போற வழிப்பாதைல மட்டும் தான் போகணும்.. அப்படியே கொஞ்சநேரம் நடந்தோம்னா பீமன் களியுருண்டைய தாண்டி ஒரு இறக்கத்துல இறங்குவோம்... இது தான் ஆறாவது மலை.. இந்த இறக்கம் முடியறப்பவே மலைக்காடு கொஞ்சம் அடர்த்தியா மாறுது.. மரங்களுக்கிடையில போய் நின்னோம்னா ஆண்டிசுனை வருது...
அத்தணை மூலிகையையும் கொண்டு வர்ற புனித தீர்த்தம் இது.. இந்த தண்ணில குளிக்குறது தீராத நோயெல்லாம் தீர்க்கும்னு சொல்றாங்க.. செம்ம ச்சில்ல்னு இருக்குற தண்ணில மூணு முக்குளி போட்ட்டுட்டு கிளம்பணும்.. கால் வச்சா ஐஸ் மாதிரி இருக்கும்... குளிக்க குளிக்க ஆனந்தம்.. குளிச்சு முடிச்சா குளிரு போயிடும்... இந்த இடத்துல பழைய துணியெல்லாம் கழட்டி அங்கங்க போட்டு வைக்காம இருக்கறது நம்ம பொறுப்பு.. குளிச்சுட்டு நடக்க ஆரம்பிச்சோம்னா 100 அடி தூரத்துல சுக்கு காபிக்கடை போடுவாங்க.. அது சிவராத்திரி டைம்ல போடுவாங்க... சீசன் முடியுற வரைக்கும் இருக்கும்..
மறுபடி ஒரு 100 அடி நடந்தோம்னா பெருசா ரெண்டு பாறை வரும்.. அதுக்கு பக்கத்துல ஒரு சுனை இருக்கு.. அதுலயும் குடிக்குறதுக்கு தண்ணி புடிச்ச்சுக்கலாம்.. இந்த இடத்துல லெஃப்ட் சைட்ல இருக்குற பள்ளத்தாக்குல அர்ச்சுணன் தபசுன்னு சொல்ற குகை இருக்கு.. 70 பேர் வரைக்கும் தங்கற அளவுக்கு பெருசா இருக்குற இந்த குகைக்கு யாரையும் அனுமதிக்குறது இல்ல.. இதை தாண்டி நடந்தோம்னா ஏழாவது மலை.. புழுதியும், பாறையுமான மலை.. இதுவும் செங்குத்தான மலை தான்... பகல்ல வந்தா கால் சுடும்.. சாமர்த்தியமா சறுக்காம ஏறலாம்.. லெஃப்ட் சைட்ல சிறுவாணி டேம் நீர்த்தேக்கத்த பார்த்து ரசிச்சுட்டு அப்படியே ஏறுனோம்னா புஸ்சுனு ஒரு குளிர்காத்து ஆரம்பிக்கும்.. குளிர குளிர ஏறி தோரணப்பாறை வர்றதுக்குள்ள போதும்.. போதும்னு ஆனாலும், உள்ள வந்து நின்னு தோரணப்பாறை விநாயகர கும்பிட்டதும் ஒரு சந்தோஷம் வரும் பாருங்க வேற லெவல்... அப்படியே பாறைய சுத்தி வந்தோம்னா பிர்ம்மாண்ட பாறை குகைல பஞ்சமூர்த்தியா அருள்பாலிக்குறாரு வெள்ளியங்கிரி ஆண்டவர்... சுயம்பு வடிவமா, பஞ்சகஞ்ச வேஷ்டி உடுத்தி, வில்வம், மாலை எல்லாம் அலங்காரத்துல கம்பீரமா அரு:ள்பாலிக்குற அவர கண்ணுல பார்த்ததும் ஆனந்த கண்ணீர் அள்ளிட்டு வரும் பாருங்க.. மலை ஏறுன அத்தணை கஷ்டமும் மறந்து போகுது.. பலபேரு என்னென்னமோ வேண்டிக்கலாம்னு வந்துட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவர பார்த்ததும் மெய் மறந்து நின்னுடுவாங்க.. அவ்ளோ ஒரு ஆத்ம சக்தி அவரு...
நாம நினைச்சா வெள்ளியங்கிரி போக முடியாது.. அவரு நாம வரணும்னு நினைச்சாத்தான் போகமுடியும்னு சொல்வாங்க.. நம்மள வரவச்சுருக்காருன்னா, நாம யோகக்காரங்க தான்..ஆனந்த தரிசனம் பண்ணலாம்.. இங்க நம்ம கோயம்புத்தூர் ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் ஓனர் சிவகணேஷ் அண்ணன் தான் பூஜை செய்யுற உரிமைய டெண்டர் எடுத்து, காணிக்கை ஏதும் வாங்காம ஆண்டவருக்கு சேவை பண்ணிட்டு வர்றார்.. பத்து வருஷத்துக்கும் மேல இந்த சேவைய அவர் செய்யுறார்..ரொம்ப எளிமையா வெள்ளியங்கிரி கோவில் பக்கத்துல நிப்பாரு... வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதில பஞ்சவாத்தியம் முழங்க ஆறுகால பூஜைகள் நடக்குது.. நாம போன நாள்ல ஈஸ்வரமூர்த்தி சாமி தான் பூஜை பண்ணினார்.. ஜில் கிளைமேட்ல வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் பண்ணிட்டு, மெதுவா மலை இறங்கினா பலகார மேடை வருது... இந்த இடம் தான் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய இடம்..
இங்க வந்து நின்னாலே சுத்தி பார்க்குறது எல்லாம் செம்ம சீனரியா இருக்குது.. பார்க்க பரவசம் தான்.. நிறைய பேரு அதிகாலைல சூர்யோதயம் பார்க்குறதுக்கு இந்த இடத்துக்கு வர்ற மாதிரி பிளான் பண்ணி வருவாங்க.. மலைய மூடி இருக்குற மேகங்களுக்கு மேல சூரியன் மிதக்குறமாதிரி ஒரு பொன்னிற காட்சி தெரியும் பாருங்க... வேற லெவல்ல இருக்கும்..
சரி எல்லாம் பார்த்துட்டு மெதுவா இறங்க ஆரம்பிக்கணும்.. இந்த மலை புழுதி மண்ணா இருக்குறதால ரொம்ப கவனமா இறங்கணும்... கொஞ்சம் ஏமாந்தா வழுக்கிடும்.. அப்படியே மெதுவா மேல ஏறுன வழிலயே பொறுமை இழக்காம கீழ வர வேண்டியது தான்.. கீழ வரும்போது கால்கள் நடுங்க ஆரம்பிக்கும்.. கல்லு குத்தும்.. படி எல்லாம் சூடாகி சுடும்.. பல பேருக்கு கண்ணுல தண்ணியே வரும்.. ஆனாலும் ஒரு விஷயம் மட்டும் நியாபகம் வச்சுக்கணும்.. அது என்னன்னா’ ‘’நாமளே தான் நடந்து இறங்கணும்.. வேற வழி இல்ல..’’ கூட்டமா இருக்குற நாட்கள்ல இன்னும் பொறுமையா மலை ஏறி இறங்குறது நல்லது..
மலை ஏறுறவங்க ஒரு வேளை சாப்பாடாவது மேல எடுத்துட்டு போறது நல்லது.. தவறாம தண்ணி பாட்டில் வச்சுக்கோங்க... அது பிளாஸ்டிக் பாட்டிலா இருந்தா நம்மகிட்ட 20 ரூபா வாங்கிட்டு வனத்துறை ஒரு ஸ்டிக்கர் ஒட்டி விடறாங்க.. திரும்ப வந்து பாட்டில கொடுத்தா 20 ரூபாய திருப்பிக் கொடுக்குறாங்க.. நைட்ல மலை ஏற பிளான் பண்ணுறவங்க டார்ச் லைட் மறக்காம எடுத்துக்கணும்.. அப்புறம் மிட்நைட்ல ஏழாவது மலை போனோம்னா குளிர் தாங்க முடியாது.. பார்த்துக்கோங்க...
வெள்ளியங்கிரி மலைப்பாதை எல்லாம் உருண்டு கிடக்குது... இதையெல்லாம் சீரமைக்கலாம்... அப்புறம் சபரி மலை மாதிரி டோலி எல்லாம் அனுமதிச்சாங்கன்னா வயசானவங்க ஏறிப்போயிட்டு வர முடியும்... ஆதிவாசிகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.. மலை மேல எந்த ஒரு வசதியும் இல்ல.. இருட்டுல யாராவது தடுக்கி விழுந்தா கூட அவங்க பாடு திண்டாட்டம் ஆயிடுது... அதனால ஒவ்வொரு மலைக்கும் மெடிக்கல் கேம்ப், பக்தர்கள் தங்குறதுக்கு டெம்பரரி ஷெட், மலைக்கு மலை குடி தண்ணீர், மலைப்பாதைல சோலார் லைட்டு, கழிப்பிட வசதி எல்லாம் அரசாங்கம் பண்ணித்தந்தா நல்லாருக்கும்... பார்ப்போம் வருங்காலத்துல வரலாம்...
பலபேரு கண்ணுல தண்ணி விடாத குறையா கஷ்டப்பட்டு மலை ஏறி இறங்கினாலும், அடுத்த வருஷமும் திரும்ப வருவாங்க பாருங்க. அதாங்க வெள்ளியங்கிரி ஆண்டவரோட ஸ்பெஷல்... இதுக்கு முன்னாடி போனதில்லன்னா நிச்சயம் ஒரு தடவ போயிட்டு வாங்க..