பண்ணாரி கோவிலில் பிச்சை எடுத்து ஒன்றரை லட்சம் சேர்த்ததாக கூறிய பெண் ஒருவரிடம், ஆவணங்கள் இல்லாமல் இருந்ததால் அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப்பணம் பிச்சை எடுத்து தான் சேர்த்தாரா? அல்லது திருட்டு செயல் எதிலும் ஈடுபட்டாரா? எனவும் போலீசார் விசாரிக்கிறார்கள்.
திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லூர் சர்ச் அருகே இன்று மாலை 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேலையில் கட்டுக்கட்டாக பணத்தை சுற்றி வைத்துக் கொண்டு அந்த பகுதியில் சுற்றி வந்தார். இதைப்பார்த்து அப்பகுதியினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த மாநில வரி அலுவலர் குணசேகர்,சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு மணிமேகலை, சரவணக்குமார் உள்ளிட்ட போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.
அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சோதனையிட்ட அதிகாரிகள், ஆவணம் இல்லாமல் அந்தப்பெண் வைத்திருந்த 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். அந்தப்பணம் மாநகராட்சி ஆணையர் பவன்குமார்.கிரியப்பனவர் முன்னிலையில் கருவூலத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் துறையூர், திருமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மனைவி மணிமேகலை (வயது 36) என்பது தெரியவந்தது. அவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவில் சென்று பிச்சை எடுத்த பணம் தான் அவர் வைத்திருந்தது என தெரிவித்துள்ளார்.
உதவி ஆணையாளர் (கணக்கு பொறுப்பு) தங்கவேல் ராஜன் பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள நோ ஃபுட் நோ வேஸ்ட் காப்பகத்திற்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உண்மையிலேயே பிச்சை எடுத்த பணம் தானா அல்லது வேறு ஏதேனும் திருட்டில் அந்தப்பெண் ஈடுபட்டாரா என்பன போன்ற விபரங்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நல்லூர் காவல் நிலையத்துக்கு ரூ.1.50 லட்சம் பணம் தொலைந்ததாக புகார் வந்திருப்பதாகவும், அந்த பணமாக இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள். அந்தப்பெண் போதையில் இருந்ததால் உடனடியாக விசாரிக்க இயலாத நிலையில் பணம் அரசு கருவூலத்துக்கு சென்று இருக்கிறது.
பிச்சை எடுத்த பணமா? அல்லது திருடப்பட்ட பணமா என்பது முழுமையான விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.